Damakka.in

Website for Tamil Cinema

யூகி ; விமர்சனம்

இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜ் அரசியல் காரணங்களுக்காக காணாமல் போன ஒரு பெண்ணை தேடுகிறார். அதேபோல போலீஸ் அதிகாரியான பிரதாப் போத்தன், பிரைவேட் டிடெக்டிவான நரேன் மூலமாக காணாமல் போன கயல் ஆனந்தியை தேடச்சொல்கிறார். இதில் நரேன் தன்னுடன் கதிரையும் கூட்டணி சேர்த்துக் கொள்கிறார்.

இவர்களது தேடுதலில் கயல் ஆனந்தி, விபத்தில் சிக்கிய தனது தனது கணவனின் மருத்துவ சிகிச்சைக்காக ஆகும் செலவை ஈடுகட்ட வாடகை தாயாக இருப்பதற்கு சம்மதிக்கிறார் என்றும் அதன்பிறகு அவர் குழந்தை பெற்றுக் கொடுத்தாரா, அவரது கணவருடன் இணைந்தாரா, அவரது கணவருக்கு என்ன ஆயிற்று என மர்மமாக இருக்கும் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன.

இதன் பின்னணியில் யார் மூளையாக இருந்து செயல்பட்டார்கள் ? இதனால் ஆனந்திக்கும் அவரது கணவருக்கும் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை விளக்கமாகச் சொல்கிறது.

சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாடகைத்தாய் விஷயம் இந்தப்படத்திலும் ஒரு சரியான கோணத்தில் கையாளப்பட்டுள்ளது.

யூகி என்கிற டைட்டிலுக்கு ஏற்றமாதிரி படத்தின் கதை நகர்வதை வைத்து நாம் சில விஷயங்களை யூகித்தால் இடைவேளைக்குப்பிறகு மற்றும் கிளைமாக்ஸ் நெருங்கும் சமயத்தில் அதற்கெல்லாம் வேறு கோணத்தில் புதிய ட்விஸ்ட்டுகளை கொடுத்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குனர் ஸாக் ஹாரிஸ்.

படத்தில் நட்டி, நரேன், கதிர் என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும் எல்லோருக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து எல்லோர் மீதும் கதையை சரிசமமாக நகர்த்தி, இவர் தான் அவரா, அவர்தான் இவரா என்பது போன்ற சந்தேகங்களுக்கு, கடைசிவரை சஸ்பென்ஸுடனேயே அவர்களை நம்மை பின்தொடர வைத்திருப்பதில் இயக்குனர் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படபட பேச்சும் ஸ்பீடான நடையும் என நட்டியின் நடிப்பு வழக்கம்போல வசீகரிக்கிறது. தனது நோயாளி மனைவியை பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்துகொண்டே, நரேனுக்கு உதவியாக தேடுதல் வேட்டையிலும் ஈடுபடும் அப்பாவி இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கதிர். அவர் யார் என்கிற விஷயம் இறுதியாக தெரிய வரும்போது நிச்சயம் நம்மால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.

அதேபோல நரேனின் கதாபாத்திரமும் ஒரு திகில் நிறைந்த கதாபாத்திரமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. டிடெக்டிவ் உதவியாளராக ஆத்மியாவும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். மறைந்த நடிகர் பிரதாப் போத்தன் சில நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

படத்தின் இயக்குனர் காட்சிகளை நட்டியின் கோணத்திலும் நரேனின் கோணத்திலும் மாற்றி மாற்றி நகர்த்தும்போது சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அது இந்த கதைக்கு கொஞ்சம் மைனஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் திரைக்கதையுடன் அதை அழகாக இணைத்து நம்மை குழம்ப விடாமல் இழுத்துச்செல்ல இயக்குனர் ஸாக் ஹாரிஸ் முயற்சித்திருக்கிறார். சஸ்பென்ஸ் பிரியர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *