Damakka.in

Website for Tamil Cinema

ஆர் யூ ஓகே பேபி ; விமர்சனம்

 

கேரளாவில் வசிக்கும் குழந்தை தம்பதி சமுத்திரக்கனி, அபிராமி இருவரும்  பல வருடங்களாக இல்லாத நிலையில் சென்னையில் உள்ள முல்லையரசி  என்பவரின் பெண் குழந்தையை தத்தெடுக்கின்றனர். பொறுப்பில்லாமல்  சுற்றும் தனது காதலன் அசோக்கின் மூலமாக கர்ப்பமானதால், அதை கலைக்கவும் முடியாமல் வேறு வழியின்றி சமுத்திரக்கனியிடம் நர்ஸ் வினோதினி மூலமாக பணம் பெற்றுக்கொண்டு குழந்தை பிறந்ததும் அவர்களிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்து  மீதி பணத்தை பெற்றுக் கொண்டு ஒப்படைத்தும் விடுகிறார் முல்லையரசி.

 

சமுத்திரக்கனி அபிராமி இருவரும் குழந்தை தான் தங்களது உலகமே என  மாறிய சூழ்நிலையில் ஒரு வருடம் கழித்து  லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சி மூலமாக தனது குழந்தையை மீட்டுத் தரும்படி பாசப் போராட்டம் நடத்துகிறார் முல்லையரசி.

 

பெற்றவளுக்குத் தான் குழந்தை சொந்தம் என்றும் அப்படி பணம் கொடுத்து  குழந்தையை சமுத்திரக்கனி வாங்கியிருந்தால் அது குற்றம் என்றும் கூறும் குழந்தைகள் நலத்துறை இது குறித்து விசாரணை நடத்துகிறது.

 

ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியிடமிருந்து  குழந்தையை பிரித்து காப்பகத்தில்  ஒப்படைக்கிறது.  கடைசியில் இந்த குழந்தைக்கான பாசப் போராட்டத்தில்    பெற்ற தாயுடைய பாசம் வென்றதா ? வளர்ப்புத் தாயின் பாசம் வென்றதா  என்பது கிளைமாக்ஸ்..

 

குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கலை  மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. பெரும்பாலும் பெற்ற குழந்தைகளை தத்துக் கொடுப்போர்  தங்களது வசதியின்மை காரணமாகவே அந்த சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அதே சமயம் அந்த குழந்தையை தத்து எடுப்போர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் மட்டுமே  தத்தெடுக்கின்றனர். இந்த இரண்டு தரப்பினரில் யாருடைய பாசம்  அதிகமானது என்பதை அந்த சூழல் தான் தீர்மானிக்கும்.

 

இந்த கதையை பொருத்தவரை முல்லையரசி தான் குழந்தையை பெற்ற தாயாக இருந்தாலும் அவர் தனது  விருப்பத்தின் பேரில் தனது காதலனுடன் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை அப்போதைக்கு பிரச்சினை முடித்தால் சரி  என  விற்று விடுவதும் அதன்பிறகு குழந்தை தன்னிடம் இருந்தால் காதலன் திரும்பி வந்து விடுவான் என தானாக நினைத்துக் கொண்டு குழந்தைக்காக பாச போராட்டம் நடத்துவதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அங்கே பாசம் என்பது இரண்டாம் பட்சமாகவே இருப்பதால்  எப்படியாவது சமுத்திரக்கனி அபிராமி தம்பதியிடம் குழந்தை சென்று சேர்ந்து விடாதா என்கிற எண்ணத்தையே படம் முழுவதும் நமக்குள் ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். சமுத்திரக்கனி, அபிராமி தம்பதி குழந்தை வளர்ப்பில் காட்டும் அந்த அக்கறையை பார்க்கும் போது  நமக்கே அவ்வளவு பரிதாபம் வருகிறது. அந்த அளவுக்கு யதாரத்தமாக நடித்துள்ளனர்.

 

குழந்தையின் தாயாக முல்லையரசியும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் அவரது கதாபாத்திரம் மீது நமக்கு கோபமும் கொஞ்சம் வெறுப்பும்தான் வருகிறதே தவிர பரிதாபம் வரவில்லை. அதுவே அந்த கதாபாத்திரத்திற்கு, அவரது நடிப்பிற்கு கிடைத்த வெற்றி தான்.

 

தான்  நிஜத்தில் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோ போலவே  இந்த படத்திலும்  ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி அதிலும் தன் சொந்த பெயரையே  வெளிப்படுத்திக் கொண்டு உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன் என்பது  ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ரியாலிட்டி ஷோவுக்காக என்னென்ன விஷயங்களை செய்கிறார்கள் என வெளிப்படையாகவும் அவர் கூறியுள்ளதற்காக அவரை பாராட்டலாம்.

 

விசாரணை அதிகாரியாக வருபவ,ர் நர்சாக வரும் வினோதினி, முல்லையரசியின் காதலராக வரும் முருகா அசோக், அசோக்கின் தந்தை கிருஷ்ணன், ரியாலிட்டி ஷோவை நடத்தி வரும் பாவல் நவகீதன், நீதிபதி ஆடுகளம் நரேன் என அனைவருமே  தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து  நடித்துள்ளனர்.

 

ஆரம்பத்தில்  இந்த படம் ரொம்ப சீரியஸாக செல்லுமோ என நினைக்க வைத்து  ஆனால் அப்படி இல்லை ஒரு ஜாலியான கலகலப்பான அதேசமயம் உணவுப்பூர்வமாக படமாக இதைக்கொண்டு சென்றிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

 

மொத்தத்தில் இந்த ஆர் யூ ஓகே பேபி ஒரு ஆரோக்கியமான குழந்தை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *