Damakka.in

Website for Tamil Cinema

கலகத்தலைவன் ; விமர்சனம்

கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக எப்படி சாதாரண ஜனங்களுக்கு பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் செயல் ஒன்று குக்கிராமத்தில் உள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் எப்படி மறைமுகமாக பாதிக்கிறது என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.

மிகப்பெரிய வாகன தொழிற்சாலை அதிபர் தனது புதுவித லாரியை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வர நினைக்கிறார். அந்த லாரியின் தயாரிப்பில் உள்ள குறைபாடு குறித்து எப்படியோ வெளியே கசிந்து, அதனால் அவரது கம்பெனிக்கே வேட்டுவைக்கும் நிலை உருவாகிறது. இதற்கு காரணமான அந்த கருப்பு ஆடு யார் என்பது பற்றி கண்டறியும்படி மிகப்பெரிய இல்லீகல் கமாண்டோ ஆரவ்விடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இதன் பின்னணியை கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ந்து மும்பையில் இருந்து தமிழகத்துக்கு வரும் ஆரவ், ஒரு கட்டத்தில் இதன் பின்னணியில் உதயநிதி இருப்பதை கண்டுபிடிக்கிறார். உதயநிதியின் நண்பன் கலையரசனை தூண்டிலாக்கி அவரை பிடிக்க நினைக்கையில் நண்பனை காப்பாற்ற கலையரசன் உயிர் விடுகிறார்.

ஆனாலும் உதயநிதியின் காதலி நிதி அகர்வால் மூலம் உதயநிதியை நெருங்குகிறார் ஆரவ். இறுதியில் யாருக்கு வெற்றி என்பது க்ளைமாக்ஸ்..

நீண்ட நாளைக்குப் பிறகு பூனை, எலி ஆட்டம் போல ஒரு விறுவிறுப்பான படத்தை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. படத்தின் நாயகன் உதயநிதி அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அழகாக அன்டர்பிளே செய்து இருக்கிறார். இதில் வேறு ஒரு மாஸ் கமர்சியல் ஹீரோவை போட்டிருந்தால் இந்த படத்தின் கதையே வேறு மாதிரி திசை மாரி போயிருக்க வாய்ப்பு அதிகம். அந்தவகையில் உதயநிதிக்கு நாம் நன்றி சொல்வதில் தவறில்லை.

அதேசமயம் வில்லனாக இந்த படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் ஆரவ் இப்போதுதான் தனது திரையுலக பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறார் என்று சொல்லும் விதமாக மிடுக்கும் கம்பீரமும் கலந்த கச்சிதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் உதயநிதி வரும் காட்சிகளை விட ஆரவ் வரும் காட்சிகளே அதிகம். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அடுத்த இடத்துக்கு செல்வார் என உறுதியாக சொல்லலாம்.

கதாநாயகி நிதி அகர்வால் ஆரம்பத்தில் ஜாலியாக இருந்தாலும் பின்னாளில் மருத்துவ சேவை செய்ய வேண்டும் என, தனது கொள்கைக்காக தனது காதலனை கூட பிரிய தயாராகும் இடத்தில் நிமிர்ந்து நிற்கிறார்.

உதயநிதியின் நண்பனாக அவருக்கு துணை நிற்கும் தோழனாக கச்சிதமான கதாபாத்திரத்தில் மீண்டும் கலையரசன். இவர்கள் தவிர ஆரவ் கூடவே வலதுகையாக வரும் அங்கனா ராயும் தன் பங்கிற்கு வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். மேலும் அனுபமா குமார், விக்னேஷ்காந்த், ஜீவா ரவி உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து நடித்துள்ளனர்.

பாடல்கள் மூலம் மெல்லிய மயிலிறகால்  இசை அமைப்பாளர் அருள் குரோலி வருட, பின்னணி இசையால் அதகளம் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த்தேவா.

மகிழ்திருமேனி படங்கள் என்றாலே பல விஷயங்கள் டீடைலாக சொல்லப்பட்டிருக்கும். குறிப்பாக கிளைமாக்சில் பல ட்விஸ்ட்டுகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் படத்திலும் அதற்கு குறை ஒன்றும் இல்லை.

ஒரு அரசு நிறுவனத்தை தனியாருக்கு விற்கும்போது அது கீழ்மட்டத்தில் உள்ள மக்கள் வரை என்னவெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இதைவிட அழகாக சொல்லிவிடமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *