Damakka.in

Website for Tamil Cinema

செஞ்சி ; விமர்சனம்

 

தமிழில் புதையல் வேட்டை குறித்த படங்கள் வெளியாகி நீண்டநாள் ஆகிவிட்டது. அந்த ஏக்கத்தைப் போக்கும் விதமாக வெளியாகியுள்ள படம் தான் செஞ்சி.

பிரான்சில் இருந்து பாண்டிச்சேரியில் தனது தாத்தா பாட்டி வசித்த பூர்வீக வீட்டை பார்க்க வருகிறார் நாயகி கெசன்யா. வந்த இடத்தில் அவரது பழங்கால வீட்டில் புதையல் பற்றிய குறிப்பு ஒன்று கிடைக்கிறது. அங்குள்ள பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கணேஷ் சந்திரசேகரிடம் இந்த விபரத்தை கூறுகிறார்.

அவரும் கெசன்யாவுடன் தனது உதவியாளர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு அந்த புதையல் குறித்த மற்ற குறிப்புகள் எங்கே இருக்கிறது என்று ஒவ்வொன்றாக தேடிச் செல்கிறார். ஒருகட்டத்தில் தமிழக எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் இருக்கும் இடத்தையும் கண்டுபிடிக்கிறார்.

அதேசமயம் அந்த பகுதியில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் பெற்றோர்கள் திட்டினார்கள் என்பதற்காக கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவர்கள், தவறுதலாக காட்டுக்குள் நுழைந்து, அதிலும் குறிப்பாக புதையல் மறைத்து வைக்கப்பட்டுள்ள அந்த குகைக்கே வந்து விடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் போலீசாரால் தேடப்படும் தீவிரவாதிகள் சிலர், அந்தப்பகுதியில் இருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்து தலைமறைவாக சுற்றுகிறார்கள்.

புதையலை தேடி வந்த பாண்டிச்சேரி குழு, குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்டு கிளம்பும்போது தீவிரவாதிகள் கையில் சிக்குகிறார்கள். இதில் சேதாரமின்றி அவர்களிடமிருந்து தப்பினார்களா ? புதையலை அவர்களிடம் பறிகொடுத்தார்களா ? என்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ்.

படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல ஏரியாக்களில் புகுந்து விளையாடியிருக்கும் கணேஷ் சந்திரசேகர் இயல்பான நடிப்பு என இல்லாவிட்டாலும் முகம் சுழிக்க வைக்காத பாந்தமான நடிப்பை வழங்க முயற்சித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவர் நடிப்பை விட அவர் மீது நமக்கு மரியாதை வந்துவிடுகிறது.

அதேபோல பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் கெசன்யாவும் பல காட்சிகளில் சூழலை உணர்ந்து இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். இதில் தீவிரவாதிகளின் தலைவராக வருபவர் பல படங்களில் நடித்தவர் என்பதால் அந்த அனுபவம் பளிச்சிடுகிறது.

அதேசமயம் எந்த முன் அனுபவமும் இல்லாத அந்த ஐந்து குழந்தைகளும் ரொம்பவே எதார்த்தமாக நடித்திருப்பதும் அவர்களை இயக்குனர் கச்சிதமாக வேலை வாங்கி இருப்பதும் ஆச்சரியமளிக்கிறது.

குறிப்பாக புதையல் பயணம் பற்றிய படம் இடைவேளைக்குப்பின் பெரும்பாலும் காட்டுக்குள்ளேயே பயணிக்கிறது என்பதாலும் உண்மையிலேயே ஒரு மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று வந்த உணர்வை இந்தப்படம் கொடுக்கிறது.

அதனாலேயே ஆங்காங்கே சில தொய்வுகள் ஏற்பட்டாலும் நம்மிடம் பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காணாமல் போன குழந்தைகள் தலைமறைவு தீவிரவாதிகள், புதையலைத் தேடிச்செல்லும் குழுவினர் என மூன்று தரப்பினரையும் இடைவேளைக்குப்பின் அழகாக ஒன்றிணைத்து திருப்தியான ஒரு கிளைமாக்ஸையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்திரசேகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *