Damakka.in

Website for Tamil Cinema

இந்த கிரைம் தப்பில்ல ; விமர்சனம்

 

நாட்டில் எவ்வளவு தான் போலீஸ் பாதுகாப்பு போட்டாலும், என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததாக தெரியவில்லை. அப்படி சில நிமிட இச்சைக்காக இளம் பெண்களின் வாழ்க்கையையே சீரழித்து அவர்களது குடும்பத்தையே நிலைகுலைய செய்யும் கயவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களே தண்டனை வழங்க கிளம்பினால் ‘இந்த கிரைம் தப்பில்லை’ என சொல்ல முயற்சித்திருக்கிறது இந்த படம்.

 

ஆடுகளம் நரேன் தலைமையில் இயங்கும் இளைஞர் குழு ஒன்று அவரது உத்தரவின்படி சில நபர்களை தேடிப்பிடித்து கொடூரமாக கொல்கிறார்கள். இன்னொரு பக்கம் கிராமத்தில் இருந்து வரும் நாயகி மேக்னா எலன் நகரத்தில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலைக்கு சேர்ந்து மாடர்ன் பெண்ணாக மாறுகிறார். அவரை மூன்று இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு காதலிக்கின்றனர். அவரும் மூவருக்குமே கிரீன் சிக்னல் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்.

 

அவர்கள் மூவரும் நண்பர்கள் என்பதும் ஒருவரை அறியாமலேயே ஒருவர் மேக்னாவை அடைய விரும்புகிறார்கள் என்பதும் ஒரு கட்டத்தில் அவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்திற்கு வரவழைக்கும் மேக்னா ஆடுகளம் நரேனின் கைகளில் அவர்களை ஒப்படைக்கிறார் என்பதும் அடுத்தடுத்து நமக்கு கொடுக்கப்படும் அதிர்ச்சிகள்.

 

இந்த மூவரும் யார் ? இவர்களை எதற்காக ஆடுகளம் நரேனின் வசம் மேக்னா  ஒப்படைக்கிறார் ? மேக்னாவுக்கும் ஆடுகளம் நரேனுக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கெல்லாம் பிளாஸ்பேக்கும் கிளைமாக்ஸும் விடை சொல்கிறது.

 

படத்தில் இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் தாண்டி தனித்து தெரிகிறார் நாயகி மேக்னா எலன். கிராமத்தில் அப்பாவி பெண்ணாக இருப்பவள் நகரத்திற்கு வந்து மாடனாக மாறுவதை எண்பது 90களில் வெளியான சினிமாக்களில் பார்த்திருப்போம். நீண்ட நாளைக்கு பிறகு இந்த படத்தில் அதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. பாட்டு, நடனம், சண்டைக்காட்சி கூடவே நடிப்பு என ஓரளவுக்கு மொத்த படத்தையும் தாங்கி பிடிக்கிறார் மேக்னா எலன்.

 

நாயகன் பாண்டி கமலும் தன் பங்கிற்கு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆடுகளம் நரேன் இதுவரை அவர் ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தில் இன்னொரு ரமணாவாக மாறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். மேக்னாவை விடாப்பிடியாக துரத்தி காதலிக்கும் அந்த மூன்று பேரில் அம்மாஞ்சி இளைஞனாக நடித்திருப்பவர் அனைவரையும் கவர்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ஏஎம்எம் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பரிமளவாசன் இருவரும் இந்த படத்தின் பரபரப்பிற்கு உதவி செய்திருக்கிறார்கள். இயக்குனர் தேவநாதன் ஒரு விழிப்புணர்வு கதையை கையில் எடுத்துக்கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிரான தனது கோபத்தை இதில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

இருந்தாலும் படத்தில் நடித்துள்ள பலரது நடிப்பில் செயற்கைத்தணம் இழையோடுவதை கவனமாக தவிர்த்திருக்கலாம். குறிப்பாக இதில் நடித்த நடிகர்களுக்கு சில மாதங்கள் ரிகர்சல் கொடுத்து நடிக்க வைத்திருந்தால் அவர்களது நடிப்பு இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் என்பதே படம் பார்க்கும் போது நமக்கு தோன்றும் உணர்வு.

 

சட்டத்தை மீறுவது தப்பு என்றாலும் நல்ல விஷயத்திற்காக செய்யும் எந்த கிரைமும் தப்பில்லை என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *