Damakka.in

Website for Tamil Cinema

நான் மிருகமாய் மாற ; விமர்சனம்

தானுண்டு தன் வேலையுண்டு என சென்றுகொண்டிருக்கும் ஒரு சராசரி இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் அவனை அநீதிக்கு எதிராக பொங்கி எழும் மிருகமாய் மாறும் அளவிற்கு எப்படி கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை.

சினிமாவில் சவுண்ட் இன்ஜினியர் பணி செய்பவர் சசிகுமார். அவரின் தம்பி ஒரு தொழிலதிபரை காப்பாற்றப்போய், அதனால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார். கொன்றவர்களை அடையாளம் கண்டாலும் அவர்களைக் காட்டிக்கொடுக்காமல் தப்பிக்க விடும் சசிகுமார், தானே அவர்களுக்கு கொலை தீர்ப்பு எழுதுகிறார்.

இறந்துபோன ரவுடிகளின் பாதுகாவலரான விக்ராந்த் தனது தம்பிகளின் சாவுக்கு நியாயம் கேட்க சசிகுமாரின் குடும்பத்தை நிர்மூலம் செய்து விடுவதாக அச்சுறுத்தி தூங்கவிடாமல் மிரட்டுகிறார்.

சசிகுமாரின் தம்பி யாரை காப்பாற்றினாரோ அதே தொழிலதிபரை சசிகுமாரே கொலை செய்துவிட்டால் அவரது குடும்பத்தை விட்டுவிடுவதாக நிபந்தனை விதிக்கிறார் விக்ராந்த்.

நியாயமற்ற கொலையா, இல்லை குடும்பத்தினரின் உயிரா என தத்தளிக்கும் சசிகுமார் இறுதியாக என்ன முடிவு எடுக்கிறார் என்பது மீதிக்கதை.

பெற்றோர் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தும் ஒரு சராசரி இளைஞனாக அந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் கச்சிதமாக பொருந்துகிறார். இதுவரை கிராமத்து கதைகளில் பெரும்பாலும் அவரை பார்த்து பழகி விட்டாலும் சிட்டி சப்ஜெக்ட்க்கும் தான் மிகச்சரியான ஆள் தான் என்பதை இதில் நிரூபித்துள்ளார் சசிகுமார். தம்பியின் மரணத்திற்காக பொங்கி அழுவதும், அதற்கு பழிதீர்க்க பொங்கி எழுவதும் என இரு வித முகங்களையும் காட்டி அதிரவைக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் ஏன் அப்படி ஒரு முடிவு எடுக்கிறார் என்பதற்கான காரணம் தெரியவரும்போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும், இருந்த இடத்தில் இருந்துகொண்டே தனது வார்த்தைகளாலும் முக பாவங்களாலும் கொடூரமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார் நடிகர் விக்ராந்த். அவருக்கு சரியான வலதுகையாக மலையாள நடிகர் அப்பாணி சரத் படம் நெடுக குரோதம் காட்டியுள்ளார்.

சசிகுமாரின் மனைவியாக நீண்ட இடைவேளைக்குப்பின் பாந்தமான கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியாவை பார்க்க முடிவது மகிழ்ச்சி தருகிறது.

ஒரு கூட்டுக்குடும்பம் சாதாரண நிகழ்வு ஒன்றால் எதிர்பாராதவிதமாக எப்படி நிலை குறைகிறது என்பதை இயக்குனர் சத்யசிவா ஆரம்பக்காட்சியில் இருந்து தெளிவாக நகர்த்தியுள்ளார். இடைஇடையே சில காட்சிகள் பிளாஷ்பேக்கில் வந்துபோவது மட்டும் சற்றே குழப்பம் ஏற்படுத்தினாலும் அதற்கான விடைகளையும் திருப்பங்களையும் சரியான இடங்களில் நுழைத்து குழப்பத்தை தெளிய வைக்கவும் செய்திருக்கிறார்.

இந்த சீரியஸான ஆக்ஷன் கதைக்கு ஜிப்ரானின் இயற்கையான பின்னணி இசை வலு சேர்த்திருக்கிறது அதுமட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் இந்த படத்தின் விறுவிறுப்புக்கு துணை சேர்த்திருக்கிறார். படத்தின் கதாநாயகனான சசிகுமார் சவுண்ட் இன்ஜினியர் என்பதால், தனது தொழில்துறை நுணுக்கங்களை பயன்படுத்தி எதிரிகளை மடக்க முயற்சிப்பார் என நிறைய எதிர்பார்த்தால் சற்று ஏமாற்றமே.

அதேசமயம் ஓரிரு சண்டைக்காட்சிகள் என்றாலும் ரத்தம் தெறிக்க, அனல் பறக்க விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார்கள். அந்தவகையில் ஆக்சன் பிரியர்களுக்கு இந்தப்படம் திருப்தியான தீனி தான் என்பதில் சந்தேகமில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *