Damakka.in

Website for Tamil Cinema

இன்ஃபினிட்டி ; விமர்சனம்

நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஒரு பக்கம் தன் மகள் காணாமல் போய்விட்டார் என புகார் கொடுக்க வரும் தம்பதி. இன்னொரு பக்கம் அதை விசாரிக்க வேண்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மறுநாளே மர்மமாக கொல்லப்படுகிறார். இதையெல்லாம் விசாரிக்க சிபிஐ தரப்பிலிருந்து நியமிக்கப்படுகிறார் நட்டி நட்ராஜ்.

ஒவ்வொரு தடயங்களாக கண்டுபிடித்து அவர் முன்னேற அவரையே போட்டுத் தள்ள முயல்கிறது ஒரு கூட்டம். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று இறுதியில் தெரிய வரும்போது ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்குமே அதிர்ச்சி தான்.

எதற்காக இந்த கொலைகள், இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, சில திருப்பங்கள் என கலந்துகட்டி சொல்லி இருக்கிறார்கள்.

நட்டி நட்ராஜுக்கு ஏற்ற மிடுக்கான துடிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். யூனிபார்ம் போடாமலேயே படம் முழுக்க படு வேகமாக நடிப்பை வழங்கி இருக்கிறார். குறிப்பாக அவர் அந்த வழக்கை அணுகும் விதமும் ஒவ்வொருவரிடமும் அவர் பேசும் விதமும் அந்த கதாபாத்திரத்தை இன்னும் செம்மைப்படுத்துகின்றது.

படத்தின் நாயகி என்றால் நட்டிக்கு உதவும் டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் வித்யா பிரதீப் தான். கிளைமாக்ஸுக்கு முன்னதாக அவரிடமும் ஒரு ட்விஸ்ட் வைத்து அதிர்ச்சி தருகிறார்கள். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வரும் முனீஸ்காந்த் சீரியஸான காட்சிகளிலும் கூட காமெடி பண்ண முயற்சித்து இருக்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளதுடன் கதையோட்டத்திலேயே இயல்பாக கலந்து விடுகிறார்கள்.

குறிப்பாக தங்களது பெண்ணை காணோம் என தேடி வந்த பெற்றோருக்கு அவள் எதனால் கொல்லப்பட்டால் என்கிற செய்தி தெரிய வரும்போது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட அதிர்ச்சி தான். ஆனால் இந்த காலத்தில் அப்படி எல்லாம் கூட நடக்கிறது தானே ?

படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் விறுவிறுப்பை கூட்டி உள்ளன. அதே சமயம் நிறைய சஸ்பென்ஸ் திருப்பங்கள் ஆகியவற்றை வைக்க விரும்பிய இயக்குனர், அதை ஒரு தெளிவான திரைக்கதையில் கோர்த்து இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

அதே சமயம் படம் விறுவிறுப்பாக எந்த இடத்திலும் போரடிக்காமல் நகர்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். துப்பறியும் படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த இன்ஃபினிட்டி சரியான படம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *