Damakka.in

Website for Tamil Cinema

பம்பர் ; விமர்சனம்

தூத்துக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து சின்னச்சின்ன திருட்டுக்களை செய்து அடிக்கடி சிறை சென்று வருபவர் வெற்றி. அத்தை மகள் ஷிவானியை திருமணம் செய்ய ஆசை தான் என்றாலும் பணம் இல்லாதவன், திருடன் என்கிற குறை பெரிதாக நிற்கிறது. இதனால் நண்பர்கள் நால்வரும் ஏதாவது பெரிய சம்பவமாக செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டு செட்டில் ஆகலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எடுத்த முடிவு தவறாக போக, புதிதாக தூத்துக்குடிக்கு வரும் போலீஸ் அதிகாரி இவர்களை வேட்டையாடி ஜெயிலில் தள்ள நினைக்கிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக சபரிமலைக்கு மாலை போடுகிறார்கள். அப்படி சபரிமலை கோவிலுக்கு போகும்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கும் இஸ்லாமியரான ஹரிஷ் பெராடியிடம் 10 கோடி பரிசு விழுகின்ற பம்பர் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்குகிறார் வெற்றி.

சில நாட்கள் கழித்து அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி பரிசு விழுகிறது. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக அதை விற்றவரான ஹரீஷ் பெராடியிடமே அந்த லாட்டரி டிக்கெட் இருக்கிறது இதை அறிந்த ஹரீஷ் பெராடியின் குடும்பமே அந்த பணத்தை தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அவரிடம் வற்புறுத்துகிறார்கள்.

ஆனாலும் அதை வெற்றியிடம் சேர்ப்பதற்காக தூத்துக்குடிக்கு கிளம்புகிறார் ஹரீஷ் பெராடி. வெற்றிக்கு விற்கப்பட்ட லாட்டரி டிக்கெட் எப்படி இடம் வந்தது ? ஆள் அட்ரஸ் எதுவும் தெரியாமல்  வெற்றியைத் தேடி தூத்துக்குடிக்கு சென்ற ஹரீஷ் பெராடியால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா ? அந்த பணம் யாருக்கு கடைசியில் சொந்தமானது என்பதுதான் மீதிக்கதை.

கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி இந்த பம்பர் படம் மூலம் சரியான கதையையும் அதில் சரியான கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்கேற்ற மீட்டர் தாண்டாத நடிப்பையும் வழங்கி இருக்கிறார். எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என துடிப்பது, தாயிடமும் காதலியிடமும் பணிந்து போவது, போலீஸ்காரர்களிடம் சலம்புவது என ஒரு சராசரி இளைஞனாக காட்சியளிக்கிறார் வெற்றி, ஆனால் இடைவேளைக்குப் பிறகு பணம் அவரை எப்படி மாற்றுகிறது என்பதை காட்சிக்கு காட்சி அவரது இன்னொரு முகம் வெளிப்படுத்துகிறது.

கதையின் இன்னொரு ஹீரோ என்று சொன்னால் நேர்மையின் மறு உருவமாகவே காட்சி அளிக்கும் இஸ்லாமியராக நடித்துள்ள ஹரீஷ் பெராடியைத்தான் சொல்ல வேண்டும். அந்த வயதுக்கே உரிய தள்ளாட்டம், மெது நடை, அளவான வசன உச்சரிப்பு என அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். வீட்டில் தனது மகளின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்று காசுக்காக திண்டாடும் நிலையிலும் வேறு ஒருவருக்கு சொந்தமான லாட்டரியில் விழுந்த பணத்தை அவருக்கு ஒப்படைப்பதற்காக செல்லும் இடத்தில் மதங்களை தாண்டி மனிதநேயத்தை படம் பார்ப்பவர்களுக்கு கடத்துகிறார்.

கதாநாயகியாக ஷிவானி முறைப்பெண்ணாக வந்தாலும் வழக்கமான டூயட் பாடும் கதாநாயகிகள் போல் இல்லாமல் கதைக்கு தேவையான அளவுக்கு வந்து போகிறார். வெற்றியின் நண்பர்களாக நடித்துள்ள தங்கதுரை உள்ளிட்டவர்கள் நண்பனுக்கு துணையாக நிற்கும்போது ஒரு மாதிரியாகவும் பணம் என்று வருகிற போது அவர்களது குணம் வேறு மாதிரியும் மாறுவதை இயல்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இந்த படத்தில் ஏட்டையாவாக வரும் கவிதா பாரதிக்கு மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம், அதற்கேற்ற நிறைவான நடிப்பு என ஸ்கோர் பண்ணுகிறார். இந்த படத்தின் இயக்குனர் செல்வகுமார் படத்தில் பெருமளவு எங்குமே தொய்வு வந்துவிடாமல் கவனித்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு லாட்டரி டிக்கெட் கருவில் தூத்துக்குடி, சபரிமலை, கேரளா பின்னணியில் பல நல்ல விஷயங்களை பேசுகிறது. அட, இப்படியும் மனிதர்களா என வியக்க வைக்கிறது. நேர்மை எவ்வளவு பெரிய விஷயம் என்பதை பீல் பண்ண வைக்கிறது. பல காட்சிகளில் கை தட்டல், பல இடங்களில் கண் கலங்குவதும் நிச்சயம்

குறிப்பாக இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்ததுமே இன்னும் சில நிமிடங்களில் கதையே முடிய போகிறதே இனி இதை எப்படி கொண்டு செல்லப் போகிறார்கள் என்று நாம் நினைத்தால் அதற்குப்பிறகு மீதி ஒரு மணி நேரம் வேறுவிதமாக நாம் யூகிக்க முடியாதபடி கதையை நகர்த்தி இருப்பது சாமர்த்தியம். கிளைமாக்ஸ் கூட நாம் ஒன்றை எதிர்பார்க்க, அதை நடக்க விடாமல் செய்து ஆனால் இறுதியில் நம் மனதில் பன்னீர் தெளித்துள்ளார் இயக்குனர் செல்வகுமார்.

அயோத்தி படத்திற்குப் பிறகு மனிதம் மட்டுமல்லாமல் நேர்மையையும் சேர்த்து பேசுகிற இந்த பம்பர் திரைப்படம், படம் பார்க்க போகிற அனைவருக்கும் பம்பர் பரிசு என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *