Damakka.in

Website for Tamil Cinema

சித்தரிக்கப்பட்டவை ; விமர்சனம்

கிராமத்தில் இருந்து தனது மாமன் மகளுடன் நகரத்திற்கு வருகிறார் ராம்குமார். எப்படியாவது நடிகராகி விட வேண்டுமென விளம்பரம், சீரியல் போன்றவற்றில் நடிக்க துவங்குகிறார். இன்னொரு பக்கம் அவரது மாமா மகள் ப்ரீத்தி இவரை உயிருக்கு உயிராக காதலிப்பதுடன், தனியாக இன்னொரு பெண்ணுடன் இணைந்து மாணவர்களுக்கு தேவையான பொருட்களை டெலிவரி பண்ணும் நிறுவனம் தொடங்குகிறார்.

சிறுவயதிலேயே அவரது பாதி முகம் ஏதோ காரணத்தினால் பாதிக்கப்பட அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வருகிறார் ப்ரீத்தி. இன்னொரு பக்கம் அந்த கம்பெனியின் இன்னொரு பெண் பார்ட்னரை கொன்றுவிட்டு பணத்தையும் ப்ரீத்தியையும் அடைய நினைக்கிறார் அவரது கணவரான குமரேஷ் பாபு.

ப்ரீத்தியின் டெலிவரி கம்பெனியில் இணையும் இரண்டு நபர்கள் அதை போதைப்பொருள் கடத்துவதற்கும் மறைமுகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தனது நிறுவனத்தில் தன்னை அறியாமல் ஏதோ நடக்கிறது என சந்தேகப்படும் ப்ரீத்தி, தனது மாமனை அழைத்து அதை கண்காணிக்க சொல்கிறார்.

மாமன் ராம்குமாருக்கு உண்மை தெரிய வந்து அதை ப்ரீத்தியிடம் சொல்ல வருகிறார். ஆனால் அதற்கு முன்பே வில்லன்கள் முந்திக்கொண்டு ப்ரீரித்தியின் வீட்டிற்குள் ஆஜராகின்றனர். ப்ரீத்திக்கு என்ன ஆனது ? இந்த உண்மைகளை கண்டுபிடித்த ராம்குமார் கெட்டவர்களை என்ன செய்தார் ? இதுதான் மீதி கதை.

இந்தப்படத்தின் நாயகன் ராம்குமார் தான், படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இந்த மூன்று சுமைகளையும் தன் மீது ஏற்றிக்கொண்டாலும் நடிப்பில் தன்னை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறார். குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சி அவரது இன்னொரு நடிப்பு முகத்தை வெளிப்படுத்துகிறது.

அவரது மாமன் மகளாக வரும் ப்ரீத்தி பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட முழு படத்திலும் பாதி முகத்தை மூடியபடியே நடிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். ஆனால் கதை அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை கேட்கிறது என்பதை உணர்ந்து அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

வில்லனாக கரிக்கோல் ராஜு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள குமரேஷ்பாபுவும் நரித்தனம் கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது மனைவியாக வரும் துர்கா, ராம்குமாருக்கு ஆதரவான வக்கீலாக வரும் கணேஷ்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

இன்று போதைப் பொருள்கள் எந்த விதமாக எல்லாம் அதை உபயோகிப்பவர்களுக்காக கடத்தப்படுகின்றன என்கிற உண்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும் அதேபோல ஒரு பெண் தனியாக நின்று சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்த கதையை உருவாக்கி இயக்கி இருக்கும் ராம்குமார் நடிப்பு, டைரக்ஷன் என இரண்டிலுமே பாஸ் மார்க் வாங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *