Damakka.in

Website for Tamil Cinema

ராயர் பரம்பரை ; விமர்சனம்

கோவை பகுதியில் உள்ள கிராமத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் வலம் வருகிறார் ராயர் என்கிற ஆனந்தராஜ். அவரது தங்கை கஸ்தூரி காதல் திருமணம் என வீட்டை எதிர்த்து ஓடிப் போய்விட, தனது மகளுக்கும் அதே போல காதலித்து தான் திருமணம் நடக்கும் என ஜோசியர் கூறி விட, அதை தடுப்பதற்காக மகளின் கல்லூரி படிப்பையே கூட பாதியில் நிறுத்துகிறார் ஆனந்தராஜ்.

இன்னொரு பக்கம் அந்த ஊரில் பாட்டு கிளாஸ் சொல்லிக் கொடுக்கும் நபராக தங்கி இருக்கிறார் கிருஷ்ணா. இவருக்கும் ஆனந்தராஜின் மகளுக்கும் கீரியும் பாம்பும் போல தான் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்மகள் யாரையோ காதலிக்கிறாள் என்பதாக நினைத்துக் கொண்டு தனது கையாளான மொட்ட ராஜேந்திரன் மூலமாக அதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் ஆனந்தராஜ்.

அவருக்கு துணையாக கூடவே கிருஷ்ணாவும் பயணிக்கிறார். ஆனால் ஆனந்தராஜ் மகள் யாரை காதலிக்கிறாள் என்பது தெரிய வரும்போது, ‘அட’ என்று மொட்ட ராஜேந்திரன் மட்டுமல்ல நாமும் கூட ஆச்சரியப்பட்டு போகிறோம்.

அவரது காதலன் யார், இறுதியில் அவர்கள் காதல் திருமணம் நடந்ததா, இல்லை ஆனந்தராஜ் அதை தடுத்தாரா என்பது கிளைமாக்ஸ்.

கிராமத்து பின்னணியில் நகைச்சுவையாக கலகலப்பாக ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார் இயக்குனர் டி.ராம்நாத். அதற்கேற்றபடி கிருஷ்ணா, வினோத் சாகர், மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் உள்ளிட்டவர்களை வைத்து கலகலப்பாக கொண்டு செல்லவும் முயற்சித்திருக்கிறார்.

நாயகன் கிருஷ்ணா இதற்கு முன்பு சில படங்களில் காமெடி கலந்து நடித்திருந்தாலும் இந்த படத்தில் அதைவிட இன்னும் ஒரு படி மேலே சென்று இருக்கிறார். இவர் மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் ஆகியோரிடம் ஆடும் டபுள் கேம், இல்லையில்லை ட்ரிப்பிள் கேம் நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இரண்டு பெண் தோழிகளையும் காதலிப்பதற்கு தூண்டி விட்டு அவர் ஆடும் நாடகம் எதற்காக என்று தெரிய வரும்போது அடப்பாவி என்று சொல்ல வைக்கிறார்.

கதாநாயகியாக சரண்யா.. கேரளத்து பைங்கிளியான இவர் இந்த கதைக்கேற்ற பொருத்தமான தேர்வு என காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார். இவர்களுக்கு இணையாக படம் முழுவதும் வரும் ஆனந்தராஜ் பேசும் அந்த ஆங்கில வசனம் படம் முடிந்து வெளியே வரும் போது நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

மொட்ட ராஜேந்திரனுக்கு இதில் நிறைய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சிலவற்றை பயன்படுத்தி உள்ளார். சிலவற்றை வீணடித்துள்ளார். நீண்ட நாளைக்கு பிறகு கே.ஆர் விஜயாவின் முகத்தையும் பாந்தமான நடிப்பையும் பார்ப்பதே இதமாக இருக்கிறது.

மறைந்த நகைச்சுவை நடிகர் மனோபாலா ஜோசியராக வந்து தன் பங்கிற்கு கலகலப்பூட்டுகிறார். அதேபோலத்தான் மறைந்த இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகரும் ஆனந்தராஜின் வலதுகரமாக கெத்து காட்டி இருக்கிறார்.

மகள் காதல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என ஆனந்தராஜ் எடுக்கும் முயற்சியும் காதல் திருமணத்திற்கு எதிரானவன் என காட்டிக்கொண்டே கிருஷ்ணா எடுக்கும் அதிரடிகளும் படத்தை ஓரளவுக்கு கலகலப்பாகவே கொண்டு செல்கின்றன. லாஜிக் எதுவும் பார்க்காமல் பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே கவனத்தில் வைத்து இந்த படத்திற்கு சென்றால் தாராளமாக ரசித்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *