Damakka.in

Website for Tamil Cinema

காடப்புறா கலைக்குழு ; விமர்சனம்

கிராமங்களில் அழிந்து வரும் கரகாட்ட கலை பற்றியும் அதை வாழ்வாதாரமாக உயிர் மூச்சாக கொண்டு வாழும் மனிதர்களின் சுக துக்கங்கள் பற்றியும் சொல்லியிருக்கும் படம் தான் இந்த காடப்புறா கலைக்குழு. முனீஸ்காந்த் இந்த படத்தின் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

கிராமத்தில் காடப்புறா கலைக்குழு என்கிற பெயரில் ஊர் திருவிழாக்கள் விசேஷங்களுக்கு கச்சேரிக்கு சென்று வருகிறார் முனீஸ்காந்த். அவருக்கு கீழே காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி ஹரி கிருஷ்ணா உள்ளிட்ட குழுவினர் இருக்கின்றனர். இவர்களுக்காகவே திருமணம் செய்யாமல் கலையை மட்டுமே கவனத்தில் கொண்டு நடத்தி வருகிறார் முனீஸ்காந்த்.

அவரது வளர்ப்பு தம்பி ஆன ஹரி கிருஷ்ணன் அந்த ஊரில் அவர்களுக்கு எதிரான இன்னொரு பாடகரின் தங்கையான சுவாதி முத்துவை காதலிக்கிறார். இதை விரும்பாத அண்ணன் அந்த ஊரை சேர்ந்த தலைவர் மைம் கோபியிடம் முறையிட அவரையும் மீறி இவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறார் முனீஸ்காந்த்.

ஒரு கட்டத்தில் முனீஸ்காந்த்திற்கு தானாகவே ஒரு வரன் தேடி வருகிறது ஆனால் தனது தேர்தல் தோல்விக்கு முனீஸ்காந்த் தான் காரணம் என நினைக்கும் மைம் கோபி அவரை போட்டுத் தள்ள முடிவு செய்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது மீதி கதை.

காடப்புறா கலைக்குழு என டைட்டில் வைத்திருந்தாலும் படத்தில் கரகாட்டம் கச்சேரி இவைதான் பிரதானம் என்றாலும் படத்தில் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ராஜா குருசாமி. குறிப்பாக இந்த படத்திற்கு முனீஸ்காந்த், காளி வெங்கட் இருவரையும் தேர்ந்தெடுத்தது மிகப்பொருத்தமான தேர்வு.

முனிஸ்காந்த் இதுவரை நடித்திருந்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு இதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பு இரண்டையும் கலந்து கட்டி நடித்துள்ளார். பல இடங்களில் நம்மை நெகிழவும் வைக்கிறார். அந்த அளவுக்கு நடிப்பில் எதார்த்தம் காட்டியுள்ளார் முனீஸ்காந்த்.

ஜாடிக்கேத்த மூடி போல முனீஸ்காந்த்தின் நண்பராக வரும் காளி வெங்கட்டும் அவருக்கு சளைத்தவர் இல்லை என்பது போல பின்னி பெடல் எடுக்கிறார். கூடவே ஜானி ஹரி கிருஷ்ணன் இந்த படத்தில் ஒரு ஹீரோ போல பிரமோஷன் பெற்று காதல் மற்றும் சண்டை காட்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இனி இவரை தேடி தனி படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு நிறைய வரும்.

கதாநாயகிகளாக சுவாதி முத்து மெல்லிய அழகால், அலட்டல் இல்லாத நடிப்பால் நம்மை ஈர்க்கிறார். கரகாட்ட கலைஞராக நடித்துள்ள ஸ்வேதா ரமேஷ் நாயகிக்கு இணையான முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் அது சரியானதுதான் என்றும் நிஒரூபிக்கிறார். பாட்டியாக நடித்துள்ள ஸ்ரீலேகா ராஜேந்திரன் வரும் காட்சிகளில் எல்லாம் குறும்புத்தனம் கொப்பளித்தாலும் தனது கடைசிக்காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார். மைம் கோபியும் வழக்கமான வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார்.

சிவாஜியின் உயிர் ரசிகன் என்பது போல பழைய பின்னணி பாடகர் அவதாரத்தில் தன்னை காட்டிக் கொள்ளும் சூப்பர்குட் சுப்பிரமணி வரும் காட்சிகள் எல்லாம் அவரும் அவருக்கு பின்னணியில் ஒலிக்கும் பின்னணி இசையும் சேர்ந்து நம்மை சிரிக்க வைக்கின்றன.

படத்தில் தேவைப்பட்ட இடங்களில் கரகாட்டம், கச்சேரிகளை பயன்படுத்தி கலகலப்பூட்டி இருக்கிறார்கள். நமது கலையை, கலாச்சாரத்தை காப்பாற்றும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு தாராளமாக தியேட்டருக்கு சென்று பார்ப்பதன் மூலம் ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *