Damakka.in

Website for Tamil Cinema

கண்ணை நம்பாதே ; விமர்சனம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு படத்தில் “கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்.. நீ காணும் தோற்றம்” என்று ஒரு பாடல் பாடி இருப்பார். அந்த பாடலில் அவர் சொன்ன கருத்துடன் கொஞ்சமும் மாறாமல் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் படமாக வெளியாகி உள்ள படம் தான் கண்ணை நம்பாதே.

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு ஓனரின் மகளையே காதலிக்கிறார் உதயநிதி. விபரம் தெரிந்ததும் அவரை வீட்டை ஒரே நாளில் காலி செய்யச் சொல்கிறார் ஓனர் கு.ஞானசம்பந்தம். அந்த நேரத்திற்கு பிரசன்னா தங்கி இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து தங்கிக் கொள்ள ஒரு இடம் கிடைக்கிறது. அந்த முதல் நாள் பழக்கத்தில் பிரசன்னா மற்றும் தனது நண்பர் சதீஷ் இருவருடன் குடிப்பதற்கு சும்மா கம்பெனி கொடுப்பதற்காக செல்கிறார் உதயநிதி.

டாஸ்மாக் அருகில் ஒரு கார் விபத்துக்குள்ளாக, அதில் பூமிகா கார் ஓட்ட முடியாத நிலையில் இருப்பதை பார்க்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரை டிராப் செய்கிறார். நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால் தன்னுடைய காரையே எடுத்துச் செல்லும்படியும் மறுநாள் கொண்டுவந்து விடும்படியும் உதயநிதியிடம் கொடுத்து அனுப்புகிறார் பூமிகா.

மறுநாள் காலை காரை கொண்டு விடுவதற்காக, கார் துடைக்க துணி தேடி டிக்கியை திறக்கிறார் உதயநிதி. உள்ளே பூமிகா பிணமாக கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். போலீஸிடம் இந்த விபரத்தைச் சொல்ல உதயநிதி முயற்சிக்கும்போது அதை தடுத்து உன் மீதே குற்றத்தை சுமத்தி விடுவார்கள் என ஆலோசனை கூறும் பிரசன்னா, பூமிகாவின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் டிஸ்போஸ் பண்ணும் ஐடியாவையும் கொடுக்கிறார்.

இந்த முயற்சியில் இறங்கும்போது அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டுவதுடன்  இந்த விஷயம் தெரிந்த ஒரு நபரால் இருவரும் பிளாக்மெயிலும் செய்யப்படுகிறார்கள். இறுதியில் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்கிற அதிர்ச்சியான விஷயம் உதயநிதிக்கு தெரிய வருகிறது.

இதன் பின்னணியில் என்னென்ன விஷயங்கள் நடந்தன.? உதயநிதி இதில் எப்படி சிக்க வைக்கப்படுகிறார் என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.

எண்பதுகளின் இறுதியில் க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்களை படிக்கும்போது அதை முடிக்கும் வரை கீழே வைக்கவே தோன்றாது. ஏனென்றால் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியாதவாறு திடுக்கிடும் திருப்பங்களுடன், எதிர்பாராத சம்பவங்களுடன் கதையை அழகாக நகர்த்தி சென்று இருப்பார். அப்படிப்பட்ட பாணியில் இந்த கண்ணை நம்பாதே திரைப்படத்தையும் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் மு.மாறன்.

வெகுளித்தனமான, மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட, அதனால் பிரச்சனைகளை சந்திக்கிற ஒரு சராசரி மனிதன் கதாபாத்திரத்தில் உதயநிதி வெகு அழகாக பொருந்தி உள்ளார். படத்தில் அவர் மட்டுமே கதாநாயகன் என்று சொல்ல முடியாத அளவுக்கு படம் முழுவதும் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நடிகர் பிரசன்னாவும் இணைந்து பயணிக்கிறார். அதே சமயம் தன்னுடைய வில்லத்தனத்தை அழகாக வெளிப்படுத்தி நடிக்கவும் செய்திருக்கிறார் பிரசன்னா.

கிளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக வந்து சேர்ந்து கொள்கிறார் ஸ்ரீகாந்த். அவருக்கும் வில்லன் முகமூடியை கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர்.

பூமிகா கதாபாத்திரம் இந்த படத்தில் எதிர்பாராத டுவிஸ்ட். கதாநாயகிகளாக ஆத்மிகா மற்றும் வசுந்தரா, சுபிக்ஷா என பலரும் இந்த படத்தில் இருந்தாலும் தேவைக்கு அளவாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து உண்மையிலேயே மிரட்டுகிறார். கிளைமாக்ஸில் ஓரிடத்தில் ஹீரோவாகவும் மாறுகிறார்.

மருத்துவ ரீதியாக உலகில் எத்தனையோ குற்றங்கள் நடக்கின்றன. அதில் ஒரு புதுவகையான குற்றத்தை மையமாக வைத்து இந்த படத்தை காட்சிக்கு காட்சி நகர்த்தி உள்ளார் இயக்குனர் மு.மாறன்.

படத்திற்கு சித்து குமாரின் பின்னணி இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது. இரவு நேரங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனை தாராளமாக பாராட்டலாம்.

எந்த இடத்திலாவது இரண்டு நிமிடம் வெளியே எழுந்து சென்றாலும் கதையில் நாம் மீண்டும் தொடர முடியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. விறுவிறுப்பான த்ரில்லர் படங்களை ரசிக்க விரும்பும் ரசிகர்கள் உடனடியாக இந்த கண்ணை நம்பாதே படத்திற்கு டிக்கெட் போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *