Damakka.in

Website for Tamil Cinema

கப்ஜா ; விமர்சனம்

கேஜிஎப், அதன்பிறகு மைக்கேல் என தொடர்ந்து வெளியான கேங்ஸ்டர் பாணியிலான படங்களின் வரிசையில் உருவாகியுள்ள படம் தான் கப்ஜா. கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது.

சுதந்திரம் கிடைப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு கதை துவங்குவதாக படம் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு 70களில், வளர்ந்து ஆளான இளைஞன் உபேந்திரா இந்திய விமானப்படை அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கிறார். அதற்கு முன்னதாக கிராமத்தில் உள்ள தனது தாயையும் அண்ணனையும் காதலி ஸ்ரேயாவையும் பார்த்துவிட்டு வருவதற்காக செல்கிறார். சென்ற இடத்தில் அங்கே உள்ள தாதா கும்பல் ஒன்றை எதிர்த்த அவரது அண்ணன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அதற்கு பழி தீர்க்கும் விதமாக துரோகம் செய்த போலீஸ் அதிகாரியின் தலையை எடுக்கிறார் உபேந்திரா. அடுத்து அண்ணனை கொன்றவனை போட்ட தள்ளுகிறார்.

இப்படி அடுத்தடுத்து தொடரும் மோதல்களால் தன்னை காத்துக்கொள்ள மிகப்பெரிய டான்களை எல்லாம் போட்டுத்தள்ளி மிகப்பெரிய டானாக உருவெடுக்கிறார் உபேந்திரா. அதுமட்டுமல்ல ராஜ வம்சத்தை சேர்ந்த தனது காதலி ஸ்ரேயாவின் தந்தை அரசியல் ரீதியாக தேர்தலில் ஜெயிக்க முடியாமல் தவிக்கும் நிலையில் தனது பலத்தை பயன்படுத்தி அவருக்கு ஆட்சியையும் கைப்பற்றி தருகிறார்.

ஆனாலும் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராஜா. அதையும் மீறி உபேந்திராவை திருமணம் செய்கிறார் ஸ்ரேயா. ஒரு பக்கம் இதை கவுரவ பிரச்சினையாக எடுத்துக் கொள்ளும் ராஜா அரசு இயந்திரத்தை பயன்படுத்தி உபேந்திராவை தனக்கு அடிபணிய வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். உபேந்திரா இதை சமாளித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கு உபேந்திரா கனக்கச்சிதமாக பொருந்தி உள்ளார். சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டி இருக்கிறார். அதே சமயம் கேங்ஸ்டர் ஆக உருவாவதற்கு இதற்கு முன் பல படங்களில் காட்டப்பட்டுள்ள காரணங்களில் இருந்து இந்த படத்தில் எதுவும் வித்தியாசப்படுத்தி காட்டப்படவில்லை.

காதலியாக, பின்னர் மனைவியாக மாறும் ராஜ வம்சத்து பெண்ணாக நடனம், நடிப்பு என இரண்டிலும் அசத்தியுள்ளார் ஸ்ரேயா. கிளைமாக்ஸில் தந்தையின் அதிரடி முடிவைக் கண்டு அவர் மட்டுமல்ல, படம் பார்க்கும் நாமும் அதிர்ச்சி அடைவது உண்மை.

கௌரவத் தோற்றத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார் கிச்சா சுதீப். அவர் மிகப்பெரிய சம்பவம் செய்யப்போகிறார் என எதிர்பார்த்தால் உபேந்திராவின் ஃப்ளாஷ்பேக் கதையை சொல்ல ஆரம்பித்து விடுகிறார். அதேசமயம் கிளைமாக்ஸ்சில் மீண்டும் என்ட்ரி கொடுத்து, இரண்டாம் பாகத்தில் நிச்சயம் பெரிதாக ஏதாவது செய்வார் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

கடைசி சில நிமிட காட்சிகளில் என்ட்ரி கொடுக்கும் சிவராஜ்குமார் தன்னுடைய அதிரடி வருகையை அறிவித்தாலும் அவருக்கும் இரண்டாம் பாகத்தில் தான் காட்சிகள் என்பது போன்று படம் முடிவதும் சற்று ஏமாற்றமே.

மற்றபடி படம் நடக்கும் 40கள் மட்டும் 70 களின் காலகட்டங்களை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள் படத்தின் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும். கே ஜி எஃப் படங்களுக்கு இசையமைத்த ரவி பர்சூர் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பதால் இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் காண முடியவில்லை. பாடல்கள் ஓகே.

ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் பிரமிப்பை ஏற்படுத்தவே செய்கிறது. அதே சமயம் முதல் பாகத்தில் ஒரு முடிவை கொடுத்துவிட்டு இரண்டாம் பாகத்தை தொடர்ந்தால் நன்றாக இருந்திருக்குமே என இயக்குனர் சந்துருவை நோக்கி கேள்வியும் எழுப்ப தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *