Damakka.in

Website for Tamil Cinema

‘கொன்றால் பாவம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா

 

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது.

இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியிருப்பதாவது, “‘கொன்றால் பாவம்’ படத்திற்கு வருகை தந்திருக்கும் சரத்குமார் அவர்களை இந்த மேடையில் வரவேற்று வாழ்த்துவதில் எனக்கு பெருமை. ஏனெனில் அவருடைய பண்பட்ட நடிப்பு. ‘வாரிசு’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். ‘கொன்றால் பாவம்’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது இதில் பணிபுரிந்த அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருப்பது தெரிகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக படத்தைத் திட்டமிட்டு இயக்குநர் எடுத்திருக்கிறார். அடுத்து எங்கள் குடும்பத்து நாயகி, சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். பின்னணி இசையிலும் பாடல்களிலும் சாம் சி.எஸ். அசத்தி இருக்கிறார். சார்லியின் குணச்சித்திர நடிப்பு மேலும் மெருகூட்டுகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

எடிட்டர் ப்ரீத்தி மோகன் பேசியதாவது, “இந்தப் படம் 14 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து 60 நாட்களிலேயே படத்தொகுப்பு முடிந்து விட்டது. எல்லோருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பதால் எனக்கு எடிட்டிங் வேலை ஈஸியாக இருந்தது” என்றார்.

ஒளிப்பதிவாளர் செழியன் பேசியதாவது, “தமிழ் சினிமாவில் பல முக்கிய இயக்குநர்களோடு பணியாற்றி உள்ளேன். அதுபோன்ற ஒரு முக்கிய இயக்குநராகதான் தயாளைப் பார்க்கிறேன். அந்த அளவுக்கு திட்டமிட்டு எதையும் சரியாக செய்பவர். வரலக்‌ஷ்மி, சந்தோஷ், சார்லி என அனைவரது நடிப்பும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவில் சில பரிசோதனை முயற்சிகளும் செய்திருக்கிறோம்” என்றார்.

அடுத்து நடன இயக்குநர் லீலாவதி பேசியதாவது, “இயக்குநர் என்னிடம் எதிர்பார்த்ததும் நான் அவரிடம் சொன்ன விஷயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. வரலக்‌ஷ்மி மேம்க்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. சந்தோஷ் சார் ரொம்ப சைலண்ட். கொடுத்த வேலையை சிறப்பாக செய்வார். இந்தப் படத்தில் லோலாக்கு பாடல்தான் நான் நடனம் அமைத்துள்ளேன்”.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்த்தது எனக்கு பெருமை. ஏனெனில் இது மிகவும் இயல்பாக அமைந்தது. இதன் கதையும் க்ளைமாக்ஸூம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் தயாளுடைய தேவை என்பதும் தெளிவாக இருந்தது. இறுதியில் படம் பார்க்கும்போது அதன் வேலை எனக்கு ஆத்மார்த்தமாக இருந்தது. நடிகர்கள் எல்லாருமே கத்தி மேல் நடப்பது போல சரியான மீட்டர் பிடித்த நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகவே மியூசிக்கல் படம் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய விருப்பமாக இருந்தது அதற்கான இடம் இந்த படத்தில் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. நான் இசை அமைத்துக் கொண்டிருக்கும் படங்களில் இந்த படம் மிக முக்கியமானதொரு படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை”.

நடிகர் சென்றாயன் பேசியதாவது, ” நான் சினிமாவுக்குள் வந்ததே சரத்குமார் சாரை பார்த்த தான். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக என்னை குருடனாக நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். நடிக்கும்போதே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது அப்படி என்றால் உண்மையாக அப்படி இருப்பவர்கள் எல்லாம் சாமி என்று தான் சொல்வேன். படம் பிரமாதமாக வந்திருக்கிறது”.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது, ” இயக்குநர் தயாள் எனக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களாக பழக்கம். மிகச் சிறந்த இயக்குநர் என்பதை விட அவரை மிகச் சிறந்த மனிதர் என்று சொல்வேன். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் கவிதா பாரதி பேசியதாவது, ” இதில் எனக்கு போலீஸ் துறை அதிகாரி வேடம். நிறைய இது போன்ற கதாபாத்திரங்கள் நான் நடித்திருந்தாலும் இந்த வேடம் எனக்கு வந்தபோது சரி முதலில் கதை கேட்போம் என்று கேட்டேன். நான் பார்த்து வியந்து, நண்பர்களுக்கு பலமுறை பரிந்துரைத்த கன்னட படத்தின் ரீமேக் தான் ‘கொன்றால் பாவம்’ என்பது மகிழ்ச்சியாக இருந்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். தமிழில் இது ஒரு மிக பிரம்மாண்டமான கதையாக, படமாக அமையும் என வாழ்த்துகிறேன்”.

நடிகர் சார்லி பேசியதாவது, “‘கொன்றால் பாவம்’ திரைப்படம் என்னுடைய சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம். அப்படியான படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் தயாளனுக்கு நன்றி. சினிமா பயணத்தில் அப்பா சரத்குமார் அவர்களுடனும் மகள் வரலட்சுமி அவர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறேன். குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கிட்டத்தட்ட ஒரு நான்கு மாதங்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் எந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருப்பார்களோ அந்த அளவுக்கு இந்த 14 நாட்களும் எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் உழைப்பை கொடுத்திருக்கிறோம். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் சரத்குமார் பேசியதாவது, “‘கொன்றால் பாவம்’ படத்தலைப்பே வித்தியாசமானது. மனதை ஈர்க்கக்கூடிய படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படத்திற்கு நான் வரவேண்டும் என வரலட்சுமி கூப்பிட்டார். 14 நாட்களில் இந்த படத்தை இயக்குநர் அற்புதமாக முடித்துள்ளார். எடிட்டர் ப்ரீத்தி இந்த படம் அற்புதமாக வந்துள்ளது என்று கூறியுள்ளார். ஒரு எடிட்டர் சொல்லிவிட்டால் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. வரலட்சுமி படித்து முடித்துவிட்டு நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு படம் நடிக்கிறேன் என்று கேட்டார். அதற்குப் பிறகு அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பது எல்லாமே அவருடைய சொந்த முயற்சியில் தான். நிறைய மொழிகள் கற்று வைத்துள்ளார். விரைவிலே ஆங்கிலம் பிரெஞ்சு படங்களில் நடித்தால் கூட ஆச்சரியம் இல்லை. இந்த படத்தில் சார்லியின் நடிப்பை பார்க்கும் பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்”.

அடுத்து ‘கொன்றால் பாவம்’ படத்தின் கதாநாயகி வரலக்‌ஷ்மி சரத்குமார் பேசியதாவது, “‘கொன்றால் பாவம்’ உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. ‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார். படத்தின் கதாநாயகன் சந்தோஷ் மிகவும் அமைதியானவர் இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். இயக்குநர் தயாள் சாரும் என்னைப் போலவே மிகவும் துறுதுறுப்பாக இருப்பார். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்”.

இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசியதாவது, ” நான் நீண்ட நாட்கள் ஏங்கிக் கொண்டிருந்த மேடை இது. சரியான படத்தோடு வரவேண்டும் என்றுதான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். பல வார பத்திரிகைகள் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி எனக்குள் நடிப்பு ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய அம்மாவுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆங்கில இலக்கிய நாடகமாக வந்து பின்பு நம் தென்னிந்தியாவில் கன்னடத்திலும் மலையாளத்திலும் ‘கொன்றால் பாவம்’ கதை புத்தகமாக வெளியாகி பின்பு கன்னடத்தில் படமாக இயக்கினேன். அங்கு மாநில விருது உட்பட பல விருதுகள் கிடைத்து தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்கினேன். இப்போது தமிழிலும் இயக்கியுள்ளேன். இந்த படத்திற்கு நிறைய தயாரிப்பாளர்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து வந்தார்கள். ஆனால் இந்த படத்திற்கு என்று ஒரு கதை அம்சம் இருக்கிறது. அது கெடாமல் இருக்க வேண்டும் என்று அதற்கான சரியான தயாரிப்பாளர் வரும் வரை காத்திருந்தேன். இப்போது வரை இந்த படத்திற்கு பிசினஸ் என்று எதுவும் செய்யாமல் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்தே வெளியிட இருக்கிறோம். அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

கதையின் நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, ” சில படங்களில் நடித்தால் மட்டுமே நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது போல இந்த படத்தின் கதை என்ன என்று தெரிந்த பிறகும் கூட அதிலிருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதுவே இந்த படத்தின் வெற்றி என்று சொல்வேன். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு இருக்கிறது இந்த படம் மக்களிடத்தில் போய் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *