பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்கள், பிரம்மாண்ட இயக்குனர்கள் தான் வரலாற்று படத்தை எடுக்க வேண்டுமா, இல்லை பிரம்மாண்ட நட்சத்திரங்கள் தான் அதில் நடிக்க முடியுமா என்கிற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். அதை உடைப்பது போன்று புதிய படைப்பாளிகள், புதிய நட்சத்திரங்கள் என அறிமுக கலைஞர்கள் பட்டாளம் ஒன்று சேர்ந்து உருவாக்கிய படம் தான் யாத்திசை. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்வது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது.
சேர, சோழ, பல்லவ மன்னவர்களை வீரமாக எதிர்த்து போரிட்டு வெல்கிறான் பாண்டிய மன்னன் ரணதீரன். இதனால் மாமன்னர்கள் மட்டுமல்லாது என்கிற எய்னர்கள் என்கிற கூட்டமும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இதனால் எய்னர் கூட்டத் தலைவன் கொதி என்பவன் பாண்டிய மன்னனை தான் எதிர்ப்பதாகவும் அதற்கு தனக்கு ஆதரவாக நிற்கும் படியும் சோழர்களிடம் உதவி கேட்கிறான். அவர்கள் ஆதரவு தருவதாக வாக்களிக்க, தனது கூட்டத்தை திரட்டி சிறு கூட்டத்துடன் வேட்டைக்கு வந்த பாண்டியனின் படையை சிதறடிக்கிறான். இதனை தொடர்ந்து பாண்டியன் காட்டில் தனித்து விடப்பட. எய்னர் கூட்டத் தலைவன் பாண்டியன் கோட்டையை முற்றுகையிட்டு தன்வசமாக்குகிறான்.
ஆனால் தொடர்ந்து கோட்டையை தக்க வைக்க சோழரின் உதவி தேவை என தூது அனுப்புகிறான் எய்னர் தலைவன் கொதி. இன்னொரு பக்கம் பாண்டிய மன்னன் பெரும்பள்ளி என்கிற கூட்டத்தின் உதவியை பெற்று மீண்டும் தனது கோட்டையை மீட்க விரைகிறான். தடுக்கும் எய்னர் கூட்டத்தை பெரிய அளவில் கொன்று சாய்க்கிறார்.
சோழர் கூட்டம் உதவிக்கு வராது என்பதை அறிந்து கொண்ட எய்னர் கூட்டத் தலைவர் கொதி, பாண்டியன் ரணதீரனுடன் நேருக்கு நேர் மோதலாம், யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கு நாடு சொந்தம் என பந்தயம் கட்ட இருவரும் மோதுகிறார்கள்.. வென்றது யார் என்பது கிளைமாக்ஸ்.
இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் புதுமுகங்களை கொண்டு இப்படி ஒரு அருமையான வரலாற்று படத்தை எடுக்க முடியுமா என ஆச்சரியப்படுத்தி உள்ளனர். குறிப்பாக கதை நிகழும் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் விதமாக ரொம்பவே மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளனர்.
பாண்டிய மன்னன் ஆக நடித்துள்ளவரும் எயினர் கூட்டத் தலைவர் கொதியாக நடித்துள்ளவரும் அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என நினைக்கும் அளவிற்கு நடிப்பில் எதார்த்தத்தையும் வீரத்தையும் அழகாக வெளிப்படுத்தி உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு தரப்பிலும் உள்ள முக்கிய தலைவர்களும் பொதுமக்களும் கூட தாங்களும் அந்த காலகட்டத்தில் வாழும் மனிதர்கள் போலவே நடந்து கொள்வதை பார்க்கும்போது இவர்கள் அனைவரையும் அழகாக வேலை வாங்கிய இயக்குனர் தரணி ராஜேந்திரனுக்கு டபுள் சபாஷ் போட தோன்றுகிறது.
படத்திற்கு பக்க பலமாக பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கலை இயக்குனரின் அரங்கு வடிவமைப்பும் ஆடை அலங்கார நிபுணரின் சிரத்தையும் மிகப்பெரிய அளவில் கைகொடுத்துள்ளன என்றால் அது மிகையாகாது.
புதியவர்களின் முயற்சியில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்..