Damakka.in

Website for Tamil Cinema

வர்ணாசிரமம் ; விமர்சனம்

ஜாதிகளை முன்னிறுத்தி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. ஆணவ படுகொலையை மையப்படுத்தியும் பல படங்கள் வந்துள்ளன. இந்த படத்தில் ஜாதி, ஆணவப் படுகொலை இரண்டுமே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழல்களில் எப்படி தங்களது ஆதிக்கத்தை செலுத்துகின்றன என்பதை படமாக்கி இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு டாக்குமென்ட்ரி படம் எடுக்க வருகிறார் சிந்தியா. ஆட்டோ டிரைவரான ராமகிருஷ்ணன் அவருக்கு உதவியாக ஜாதி அடக்குமுறைக்கு ஆளானவர்களையும் ஆணவ படுகொலை வழக்கில் சிக்கியவர்களையும் பேட்டி எடுக்க ஒவ்வொரு இடமாக அழைத்துச் செல்கிறார்.

முதல் சம்பவத்தில் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞன் கலெக்டராகும் கனவுடன் முயற்சி எடுத்து படிக்கிறான். அவனை உயர் சாதி பெண்ணின் காதல் தேடி வந்தாலும் படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தேர்வெழுதி அரசு வேலைபெறும் அளவுக்கு உயர்கிறான். ஆனால் வறுமையில் வாடினாலும் சாதிப்பெருமையை உயர்த்தி பிடிக்கும் பெண்ணின் பெற்றோரும் உறவினரும் அந்த இளைஞனை ஆணவ படுகொலை செய்கின்றனர். பதிலுக்கு அந்த பெண் தனது தாய் தந்தையே கொல்கிறாள். நீதிமன்றம் கொடுத்த தண்டனையை ஏற்று சிறை சென்று திரும்புகிறாள்.

இன்னொரு நிகழ்வில் கிராமத்தில் உயர் சாதியில் பிறந்த அண்ணன், பெற்றோர்  இல்லாத தனது தம்பி தங்கையை வளர்த்து ஆளாக்குவதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் தாயுமானவராக இருக்கிறார். அவரது தங்கை கல்லூரியில் படித்திருந்தாலும் கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனை விரும்புகிறாள். பெரிய அண்ணன் ஜாதி மீது பற்றுள்ளவர் என்றாலும் ஒரு கட்டத்தில் தங்கையின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். சிறிய அண்ணனும் அதற்கு துணை நிற்கிறார். இங்கே இருந்தால் சாதி பெருமை பேசி உங்களை வாழ விடமாட்டார்கள், எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அண்ணனே கூறி வழி அனுப்ப முயற்சிக்க, விதி வேறு ரூபத்தில் தன்னுடைய கோர முகத்தை காட்டுகிறது. தங்கையை கொன்றதற்காக ஆயுள் தண்டனை பெற்று சிறை செல்கிறார் பெரியண்ணன்.

அதேபோல கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பால்காரர் அமீருக்கும் கோயில் குருக்களின் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. குருக்கள் சாதி பார்க்கவில்லை என்றாலும் ஊரில் உள்ளவர்கள் சாதியை தூக்கி பிடித்து குருக்களை கோயிலை விட்டேன் துரத்துகின்றனர். அவமானம் தாங்காமல் அவர் காசிக்கு தனது மனைவியுடன் கிளம்பி விடுகிறார். காதலுக்காக அந்த ஊரிலேயே தங்கும் அந்த காதலிக்கு அமீர் அடைக்கலம் கொடுக்கிறார். ஆனால் ஜாதி வெறி பிடித்த ஒரு மிருகத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் காதலி மனநிலை பாதிக்கப்படுகிறார். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது.

இவையெல்லாம் கூட பரவாயில்லை நான்காவது கதையில் சம்பந்தமே இல்லாமல் தன் மகளுடன் வேறு ஒரு பையனை இணைத்து சந்தேகப்படும் பெற்றோர் அதுகுறித்து மகளை டார்ச்சர் செய்வதும் எந்த வம்புக்கும் போகாத அந்த இளைஞனை மிரட்டுவதுமாக இருக்க, ஒரு கட்டத்தில் இதன் காரணமாக நிஜமாகவே இந்த இருவருக்கும் காதல் மலர்கிறது. ஊரை விட்டு ஓடி வந்து வழியில் இந்த டாக்குமெண்டரி படம் எடுக்கும் குழுவியிடம் தஞ்சம் அடைகின்றனர்.

இடம் கண்டுபிடித்து கோபத்துடன் தேடிவரும் பெண்ணின் தந்தை, ராமகிருஷ்ணன் மற்றும் சந்தியா இருவரின் அறிவுரையால் மனம் மாறி காதலர்கள் இருவரையும் ஊருக்கு அழைத்து செல்கிறார் அங்கே சென்றதும் விதி வேறு ரூபத்தில் அவருக்கு எதிராகவே திரும்புகிறது.

இப்படி இந்த நான்கு நிகழ்வுகளிலும் ஜாதியால் எப்படி காதலர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படமாக்கி இருக்கிறார்கள். அதே சமயம் இந்த ஜாதி பிரச்சனைக்கு தீர்வு என எதுவும் இல்லை என்பது போலத்தான் படத்தை முடித்து இருக்கிறார்கள்.

நான்கு எபிசோடுகளிலும் நடித்துள்ள அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை எதார்த்தம் மீறாத நடிப்பால் பிரதிபலித்துள்ளனர். குறிப்பாக முதல் பாகத்தில் வரும் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள குகாஷினி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல காட்சிகளில் கண்களாலேயே பேசுகிறார்.

அதேபோல பால்காரனாக வரும் பிக்பாஸ் புகழ் அமீர் தனது முதல் படம் போலவே இல்லாமல் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். டாக்குமெண்டரி படம் எடுப்பவராக வரும் சிந்தியா லௌர் டே அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

இவர்களுக்கு உதவியாக ஆட்டோ ஓட்டுனராக வரும் ராமகிருஷ்ணன் எதார்த்தமான நடிப்பில் நம்மை கவர்கிறார். படத்தில் அவருக்கு இரட்டை கதாபாத்திரங்கள் என்பது எதிர்பாராத சர்ப்ரைஸ். மற்றும் படத்தில் நடித்துள்ள வைஷ்ணவி ராஜ், விஷ்ணு பாலா, வந்தனா உமா மகேஸ்வரி, ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, வாசுதேவன், ஏ பி ரத்தினவேல் என அனைவருமே தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

உமா தேவியின் பாடல் வரிகளில் தீபன் சக்கரவர்த்தி இசையில் பாடல்கள் கதையோடு சேர்ந்து அழகாக படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் பெண் மொழி பதிவாளர் பிரவீணாவின் மிகப்பெரிய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்து விட்டது.

இயக்குனர் சுகுமார் அழகர்சாமி 4 எபிசோடுகளையும் நேர்த்தியாக கையாண்டு உள்ளார். அதே சமயம் இந்த நான்கு கதைகளிலும் உயர் சாதி பெண், தாழ்ந்த சாதி பையன் என்கிற கான்செப்டில் மட்டுமே இந்த ஜாதிக்கொடுமையை சொல்லி இருப்பது சற்றே முரண்பாடாக இருக்கிறது. இதுவே உயர் சாதியில் இருக்கும் பையன் ஒடுக்கப்பட்ட சாதியில் இருக்கும் பெண்ணை காதலிக்கும்போது இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறானா என்பது பற்றியும் ஒரு எபிசோடில் விளக்கி இருந்தால் கதையை பேலன்ஸ் செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

யாரோ புதியவர்கள் நடித்திருக்கிறார்கள், அப்படி ஒன்றும் பெரிய படம் இல்லையே என்று ஒதுங்கிப் போகாமல் இந்த படத்தை பார்க்கலாம் என நினைத்து தியேட்டர்களுக்கு உள்ளே நுழையும் ரசிகர்களை நிச்சயமாக இந்த படம் ஏமாற்றாது. காரணம் கதை சொன்ன விதம் அப்படி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *