நகரத்தைச் சேர்ந்த பிரியா, ஆர்த்தி இருவரும் மலை கிராமம் ஒன்றுக்கு வருகின்றனர். அங்குள்ள இளைஞர் ஒருவரை துணையாக அழைத்துக் கொண்டு மூலிகை ஆராய்ச்சி செய்வதற்காக அருகில் உள்ள காட்டுக்குள் செல்கின்றனர். அப்போது அங்கே காட்டிலுள்ள வன அதிகாரி மற்றும் காட்டு வளங்களை கொள்ளையடித்து வெளியே விற்பனை செய்யும் மனிதர்கள் இவர்களுடன் சம்பந்தமே இல்லாமல் ஒரு இசை வித்வான், மனைவியுடன் கோபித்துக்கொண்டு வந்ததாக சொல்லிக்கொண்டு பிச்சைகாரன் போல திரியும் ஒருவர் என பலவிதமான நபர்கள் அந்த காட்டில் உலா வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் பிரியாவும் ஆர்த்தியும் இங்கே வந்தது மூலிகை ஆராய்ச்சிக்காக அல்ல என்பதும் மூலிகை ஆராய்ச்சி விஞ்ஞானியான காணாமல் போன தனது தந்தையை தேடியே இந்த காட்டுக்குள் பிரியாவும் அவருக்கு துணையாக ஆர்த்தியும் வந்துள்ளார்கள் என்பதும் தெரிய வருகிறது.
அதே சமயம் அவர் மூலிகை ஆராய்ச்சி தொடர்பாக கண்டுபிடித்த ஃபார்முலாவை கைப்பற்றுவதற்காக யாரோ ஒருவரால் பிடித்து அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். பிரியா மற்றும் ஆர்த்தியால் அவரை கண்டுபிடிக்க முடிந்ததா ? அப்படி அவரிடம் என்ன விஞ்ஞான பார்முலா இருக்கிறது ? அதை எதற்காக கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் ? இந்த சம்பவங்களில் வன அதிகாரிக்கும் இசை வித்வானுக்கும் என்ன தொடர்பு என்பதை சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லிங் கலந்து சொல்கிறது மீதி கதை.
மக்களின் உயிரைக் காக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும் மருந்துகளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி முதலில் அதை சுயலாபத்திற்காக வெளிநாட்டுக்கு விற்க முடிவு செய்வதும் பின்னர் தனது மகனுக்கு ஏற்பட்ட சோகமான முடிவால் மனம் மாறுகிறார். இது சிலருக்கு பாதகமாக அமைகிறது. இதை கைப்பற்ற அடுத்தடுத்து நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை.
கதாநாயகன் வைகுண்ட செல்வம் வன அதிகாரியான ரேஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தோற்றத்தில் மிடுக்கு, ஆக்ஷனில் அதிரடி என கலந்து கட்டி நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என இரண்டு விதமாக சென்று கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கிறது.
கதாநாயகிகள் ஆர்த்தி, பிரியா கதாபாத்திரங்களின் நடித்துள்ள சிவசந்தியா இசை லதா இருவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்த்தி கதாபாத்திரத்தில் ஒரு டுவிஸ்ட் வைத்து அதிர்ச்சி அளிக்கிறார்கள்.
காட்டில் இசை வித்வானாக தங்கி இருக்கும் நபரும் அவரிடம் அடைக்கலம் தேடி வரும் பிச்சைக்காரனாக நடித்துள்ள நபரும் கூட இறுதியில் யார் என தெரிய வரும்போது நமக்கு மிகப்பெரிய ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
இந்த படத்தில் மனதை நெகிழ வைக்கும் ஒரு காட்சி என்றால் கதாநாயகியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக நான்கு ஐந்து பேர் கடத்திச் செல்வார்கள். அதில் ஒருவருக்கு பாம்பு கடித்து விட கதாநாயகியை விட்டுவிட்டு நண்பரை காப்பாற்ற முயற்சிப்பார்கள். ஆனாலும் கதாநாயகி தப்பி ஓடாமல் பாம்பு கடிபட்டவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுவார். எதிரிக்கும் நன்மை செய்யும் இது போன்ற காட்சிகளை பார்க்கும்போது மோசமான குணம் கொண்ட சிலர் திருந்துவதற்கு வாய்ப்பு உண்டு.
காட்டிற்குள் ஒரு திரில்லிங்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டது போன்ற உணர்வை தருகிறார் ஒளிப்பதிவாளர் ரஹீம் பாபு. இசையமைப்பாளர் சாயின் பின்னணி இசையும் பல இடங்களில் நம்மை திகில் ஊட்டுகிறது.
சமூக அக்கறை, காட்டின் மீதான பாதுகாப்பு, நாட்டின் நலன் என பல விஷயங்களை ஒரே படத்தில் கலந்து கட்டி கொடுத்து ஒரு வலுவான திரைக்கதையுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜா பார்த்திபன்.
சிறிய படம் தானே என ஒதுக்கி விடாமல் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் ஒரு அருமையான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.