Damakka.in

Website for Tamil Cinema

V 3 ; விமர்சனம்

உலகில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை விட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி உயிரைவிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என புள்ளிவிபரம் சொல்கிறது. பாலியல் பலாத்காரத்திற்கு நிரந்தரமான தீர்வு உண்டா ? அப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு என்கவுண்டர் சரியான தீர்வாக அமையுமா என்பது பற்றி அலசி உள்ளது இந்த படம்.

சாதாரண நியூஸ் பேப்பர் ஏஜென்ட் ஆன ஆடுகளம் நரேனின் மகள் பாவனா ஒருநாள் நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தனியாக வீடு திரும்பும்போது ஐந்து கயவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி எரித்துக் கொல்லப்படுகிறார். இந்த நிகழ்வு நடந்த இரண்டு தினங்களில் அந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 இளைஞர்கள் என்கவுண்டரில் கொல்லப்படுகின்றனர்.

அரசாங்கத்திற்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. ஆனால் கொல்லப்பட்ட அந்த 5 இளைஞர்களின் பெற்றோர்களும் தங்களது மகன்கள் குற்றவாளி அல்ல என போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதன் விளைவாக மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கும் படி ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமிக்கு உத்தரவிடுகிறது. இதுகுறித்த விசாரணையை தொடங்கும் வரலட்சுமிக்கு இந்த கொலை தொடர்பான அதிர்ச்சியளிக்கும் பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. என்கவுண்டர் என்பது மனித உரிமை மீறல் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வகையில் கிடைக்கும் நீதி என்பதும் அடுத்து குற்றம் செய்பவர்கள் இதைக்கண்டு பயப்படுவார்கள் என்பதும் உண்மைதான் என்றாலும் அதில் கூட பொய் கலந்தால் என்னவாகும் என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறது மீதி படம்.

விசாரணை அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார். ஏற்கனவே வேறு ஒரு பிரச்சனையில் தான் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சைக்கு ஆளான நிலையில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்கை, கவனமாக விசாரிக்கும் அந்த முதிர்ச்சியை படம் முழுக்க தனது நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார் வரலட்சுமி. படத்தில் ஒரே இடத்தில் அமர்ந்தபடியே அவரது வேலை முடிந்து விட்டாலும் படத்தைத் தூக்கி நிறுத்தும் தூண்களில் ஒன்றாக வரலட்சுமி இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் பாவனா மனித அரக்கர்களிடம் தான் சந்தித்த கொடுமையையும் அவர்கள் குறித்து பேசும்போது கூட நாகரிகமாக பேசுவதையும் பார்க்கும்போது கல் நெஞ்சமும் கரையும். அவர் மூலமாகவே இந்த பாலியல் பிரச்சினைக்கு தீர்வாக இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என சொல்லப்படும் விஷயத்தை செய்வதற்கு யார் முன்வருவார்களோ தெரியவில்லை.

பாவனாவின் தந்தையாக ஆடுகளம் நரேன்.. தாயில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் கஷ்டத்தையும் ஒரு பெண் அதுவும் தனது மகள் இந்த நிலைக்கு ஆளாகி விட்டார் எனக்கு தெரிந்து பரிதவிப்பதுமாக ஒரு யதார்த்தமான தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.

பாவனாவின் தங்கையாக எஸ்தர் அனில் நடித்துள்ளார். அவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன்முடி அந்த கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமான தேர்வு.

படத்தின் முக்கியமான காட்சிகளில் ஆலன் செபாஸ்டின் பின்னணி இசை திடுக்கிட வைக்கிறது. சிவா பிரபுவின் ஒளிப்பதிவு துரத்தல் காட்சிகளில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

என்கவுண்டர் முடிவு என்பது எதற்காக எடுக்கப்படுகிறது, போலீஸ்காரர்களின்  பாதுகாப்பிற்காகவா? மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவா என்பதை இந்த படத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்கள்.

பாலியல் பலாத்காரத்திற்கு தீர்வு என்கவுண்டர் என்றால் அது கூட முறையாக பயன்படுத்தப்பட முடியாத அரசியல் சூழல் தான் இப்போது இருக்கிறது என்பதையும் சமீபத்தில் கூட ஆந்திராவில் அப்படி ஒரு மோசமான நாடகம் அரங்கேறியது வெளிப்பட்டதையும் இந்த படத்தில் பொட்டில் அடித்தாற்போல கூறியுள்ளார் இயக்குனர் அமுதவாணன்.

இரண்டு மணி நேரம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றதற்கும் பாலியல் அத்துமீறல்களை முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் கூட குறைப்பதற்காகவாவது சில வழிமுறைகளை அரசு பின்பற்றலாமே என யோசனை கூறியதற்காகவும் இயக்குனர் அமுதவாணனை தாரளமாக பாராட்டலாம்

 

ரேட்டிங் ; 3/5

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *