Damakka.in

Website for Tamil Cinema

துடிக்கும் கரங்கள் ; விமர்சனம்

 

போலீஸ் உயர் அதிகாரியான சுரேஷ் மேனனின் மகள் காரில் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதற்கு காரணமான நபர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை தன் கீழ் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரி சௌந்தர்ராஜாவிடம் ஒப்படைக்கிறார். சௌந்தர்ராஜாவின் விசாரணையில் அந்த நபர் காணமல் போன சங்கிலி முருகனின் மகன் ஆனந்த் நாக் என்பது தெரிய வருகிறது

அதேபோல கொத்து பரோட்டா என்கிற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் விமல். இதன்மூலம் சமூகத்திற்கு தன்னாலான உதவி மற்றும் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் ஒருநாள் ஏதேச்சையாக விமலை சந்திக்கும், சங்கிலி முருகன் ஐஏஎஸ் படிக்க வந்த தனது மகன் ஆனந்த் நாக் காணாமல் போய்விட்டார் என்றும் அவரை தேடி கண்டுபிடித்து தருமாறும் கேட்கிறார். விமலும் தேடுதல் வேட்டையை ஆரம்பிக்கிறார்.

ஒரே நபரை தேடி அலையும் விமல், சௌந்தர்ராஜா இருவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அனந்த் நாக் காணாமல் போனது எப்படி ? அவரை இருவரும் கண்டுபிடித்தார்களா ? இதன் பின்னணியில் ஒளிந்துள்ள மர்மம் என்ன என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.

இதுநாள் வரை பார்த்துவந்த வழக்கமான கிராமத்து விமலை ஒரு புது முயற்சியாக இதில் சிட்டி ஹீரோ ஆக மாற்றி இருக்கிறார்கள். வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் இளைஞர் என்பது போல அல்லாமல் சமூகப் பொறுப்பு கொண்ட யூட்யூபர் என்கிற புதிய கதாபாத்திரத்தில் அவரும் ஓரளவுக்கு கச்சிதமாகவே பொருந்துகிறார். அதுமட்டுமல்ல இந்த படத்தில் ஆக்சனிலும் இறங்கி அடித்துள்ளார். இன்னும் ஓரிரு படங்களில் இந்த ஆக்சன் பாணியை இவர் பரீட்சித்துப் பார்க்கலாம்.

நாயகி மிஷா நரங் ஆரம்பத்தில் விமலை வெறுப்பதும் பின்னர் அவருடன் காதலில் விழுவதுமான வழக்கமான ஒரு ஆக்சன் பட கதாநாயகிக்கான வேலையை மட்டும் செய்துள்ளார். இன்னொரு நாயகியான சுபிக்ஷா தந்தைக்கு எதிராகவே திரும்பும் நேர்மையான கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துவதுடன் அவர் எடுக்கும் எதிர்பாராத முடிவால் நமக்கு அதிர்ச்சியையும் தருகிறார். அவரது காதலராக வரும் ஆனந்த் நாக் மிகப்பெரிய மோசடி ஒன்றை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட நினைத்து எடுக்கும் முயற்சியில் அவருக்கு என்ன ஆகுமோ என்கிற படபடப்பை தனது நடிப்பால் நமக்கும் கடத்துகிறார்.

பல படங்களில் இதுபோன்று டுவிஸ்ட் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரங்களை பார்த்து இருந்தாலும் இதில் நடிகர் சுரேஷ் மேனன் ஏதாவது புதிதாக செய்வார் என நினைத்தால் ஏமாற்றமே தருகிறார். நடிகர் சௌந்தர்ராஜா மட்டும் தனது கதாபாத்திரத்தில் ஏதாவது செய்து ரசிகர்களை கவனம் ஈர்க்க வேண்டும் என ஒவ்வொரு காட்சியிலும் முனைப்பு காட்டியுள்ளார். சங்கிலி முருகன் வழக்கம் போல குணச்சித்திர முருகன். நடிகர் சதீஷ் காமெடி ஏரியாவில் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் சிரிப்புதான் வரமாட்டேன் என்கிறது. இவர் தனது காமெடி பாணியை இனிவரும் படங்களில் வேறு மாதிரி மாற்றி யோசித்தால் நல்லது. துணை வில்லன் பில்லி முரளி வழக்கம் போல பார்வையாலே மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இசையமைப்பாளர் ராகவ் பிரசாத் பாடல்களில் நம்மை வசியப்படுத்தா விட்டாலும் பின்னணி இசையில் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்மி பாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்றாலும் இதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிக்கலாமோ என்று தோன்றுகிறது. படத்தில் பிரியாணி தயாராவது, இறைச்சிக் கூடம் என கலை இயக்குனர் கண்ணன் மட்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.

இயக்குனர் வேலுதாஸ் ஒரு பக்கம் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கதையை கையில் எடுத்துக்கொண்டு அதை பிரியாணி தயாரிப்பு என்கிற புதிய கோணத்தில் வித்தியாசமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார். அதற்கு காரணமாக உலகளாவிய அளவில் போதைப்பொருள் எப்படி, ஏன் நம் இந்தியாவிற்குள் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் வருகிறது என ஒரு லெக்சரும் எடுத்திருக்கிறார். அவ்வளவு வலுவான விஷயத்தை யோசித்தவர் அதை திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பான காட்சிகளால் கோர்த்து இருந்தால் இது ஒரு முழுமையான ஆக்சன் படமாக அமைந்திருக்கும். இடையில் இலக்கில்லாமல் சுற்றி அலையும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைக்கின்றன.

அதே சமயம் இடைவேளைக்கு முன்பாக கடைசி 20 நிமிடங்கள் மற்றும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என பார்வையாளர்களை கட்டிப்போடவும் இயக்குனர் வேலுதாஸ் தவறவில்லை. ஒரு ஆக்சன் ஹீரோவாக மாறிய விமல் அப்படி என்னதான் செய்திருக்கிறார் பார்க்கலாம் என ஆர்வத்துடன் இருப்பவர்கள் தாராளமாக ஒரு முறை தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *