Damakka.in

Website for Tamil Cinema

தெற்கத்தி வீரன் ; விமர்சனம்

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பேரன் சாரத் கதாநாயகனாக நடித்துள்ள படம்தான் இந்த தெற்கத்தி வீரன். படத்தையும் அவரே இயக்கியுள்ளார்.

தஞ்சாவூர் பகுதியில் மிகப்பெரிய பணக்காரர் வேல ராமமூர்த்தியின் மகன்தான் சாரத். ஊரில் யார் அநியாயம் செய்தாலும் எந்த தவறு நடந்தாலும் உடனே அதை தட்டிக்கேட்பவர். இதனால் அவருக்கு காதலியாக அனகா மட்டும் கிடைக்கவில்லை.. கூடவே அரசியல்வாதி ஆர்என்ஆர் மனோகர், கவுன்சிலர் பவன், மீனவர் சங்கத் தலைவர் கபீர், துஹான் சிங், ஜாதிக்கட்சி தலைவர் ராஜசிம்மன் மற்றும் ரவுடி மதுசூதனன் என பலரது பகையையும் சம்பாதிக்கிறா.

கூடவே இருக்கும் நண்பர்கள் முருகா அசோக், நாடோடிகள் பரணி, மாரி வினோத் ஆகியோருடன் இவர்களது எதிர்ப்புகளை சமாளித்தாலும் ஒரு கட்டத்தில் இவரை அடக்குவதற்காக நண்பர்களில் ஒருவரை கொன்றுவிட்டு அந்தப்பழியை இவர் மீது போட்டு சிறைக்கு அனுப்புகிறார்கள் எதிரிகள்.

சிறையிலிருந்து சாரதி எப்படி வெளியே வருகிறார், தனது எதிரிகளை அவரால் பழிதீர்க்க முடிந்ததா என்பது மீதிக்கதை.

இந்த படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை இயக்கியதுடன் அறிமுக நாயகனாகவும் நடித்துள்ளார் சாரத். ஒரு நடிகருக்கு உண்டான ஆஜானுபாகுவான தோற்றம், அவர் எத்தனை பேரை அடித்தாலும் நம்மை நம்ப வைக்கிறது.. அதற்கேற்றார்போல் படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு சண்டைக்காட்சி வந்து கொண்டே இருக்கிறது. நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் ஆக்சன் பாதை இவரை அழகாக வரவேற்கும்.

ஜாடிக்கேத்த மூடியாக இவருக்கு ஜோடியாக நடித்துள்ள அனகாவும் தன் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஹீரோவை கலாட்டா செய்யும் காட்சிகளை விட, அவரது மனைவியாக மாறியபின் சென்டிமெண்ட் கலந்த நடிப்பில் சோபிக்கிறார்.

நண்பர்களாக வரும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, மாரி வினோத்.. ஒரு சண்டியர் இளைஞனுக்கு நண்பர்களாக இருப்பவர்கள் என்ன செய்வார்களோ அந்த வேலையை இவர்கள் கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தில் வில்லன்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அரசியல்வாதியாக வரும் ஆர்என்ஆர் மனோகர் மற்றும் மீனவர் தலைவராக வரும் கபீர் துஹான் சிங் இருவரும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மற்றபடி பவன், மதுசூதனன், ராஜசிம்மன் ஆகியோரும் சோடை போகாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்,

கதையை நகர்த்தும் மற்ற கதாபாத்திரங்களில் வேல ராமமூர்த்தி, உமா பத்மநாபன், ரேணுகா, நமோ நாராயணன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

ஊருக்காக நல்லது செய்யப்போய் தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரு இளைஞனின் கதையை பல படங்களில் நாம் பார்த்து இருந்தாலும் இது கொஞ்சம் வேறு மாதிரி சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் காதல் காட்சிகள் கொஞ்சம் யதார்த்தம் மீறியவையாக இருக்கின்றன. அதேசமயம் ஆக்ஷன் காட்சிகளில் தூள் பறக்கும் நாயகன், காதல் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அடுத்தடுத்து வரும் படங்களில் அவர் இதனை சரி செய்து கொள்வார் என நம்புவோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *