Damakka.in

Website for Tamil Cinema

சாகுந்தலம் ; விமர்சனம்

சிறுவயதில் பள்ளி பாடங்களில் ஒரு பாடமாக நாம் படித்து கடந்த கதை தான் சாகுந்தலம். சகுந்தலை, துஷ்யந்த மகாராஜா இவர்களை மையப்படுத்தி உருவான இந்த புராண கால காவியத்தை இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் அருமையான திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் குணசேகர்.

விசுவாமித்திரர், மேனகைக்கு மகளாக பிறந்த சகுந்தலை சூழ்நிலையால் கன்வ மகரிஷியின் ஆசிரமத்தில் வளர்ப்பு மகளாக வளர்கிறார். அப்போது காட்டுக்கு வேட்டையாட வரும் துஷ்யந்த மகாராஜா மீது சகுந்தலைக்கு காதல் தோன்றுகிறது.

மகாராஜாவும் தனது காதலை தெரிவித்து சகுந்தலையுடன் கந்தர்வ மனம் செய்கிறார். பின் தனது நாட்டிற்கு கிளம்பும் துஷ்யந்தன் விரைவில் முறைப்படி வந்து சகுந்தலை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து செல்கிறார்.

இந்த நிலையில் கோபக்கார முனிவரான துர்வாசர் ஒருமுறை ஆசிரமத்திற்கு வருகை தரும்போது அவரது வருகையை கவனிக்காமல் துஷ்யந்தன் நினைவாக சகுந்தலையின் மனம் லயித்துக்கிடக்க இதனால் கோபமான துர்வாசர், யாரை நினைத்து நீ என்னை கவனிக்காமல் அவமரியாதை செய்தாயோ அவன் நினைவில் இருந்து உன்னை பற்றிய நினைவுகள் நீங்கிவிடும் என்று சாபம் விடுகிறார்.

இந்த சாபம் பற்றி எதுவும் அறியாமல் தனது மணாளனை தேடி தானே அரண்மனைக்கு செல்கிறார் சகுந்தலை. ஆனால் அங்கு துஷ்யந்தனுக்கு சகுந்தலையின் நினைவு இல்லாததால் சபையோரால் அவமானப்படுத்தப்பட்டு ஊராரால் வெறுக்கப்பட்டு எங்கேயோ செல்கிறாள் சகுந்தலை.

சில நாட்கள் கழிந்த பின் சகுந்தலைக்கு தான் அளித்த முத்திரை மோதிரம் துஷ்யந்த மகாராஜாவுக்கு கிடைக்கிறது. அதன் மூலம் சகுந்தலையை தான் காந்தர்வ மணம் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. இதனை தொடர்ந்து சகுந்தலையை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் துஷ்யந்த மகாராஜா.

சகுந்தலையை கண்டுபிடித்தாரா ? தன் மணாளனே தன்னை அவமானப்படுத்தி அனுப்பிய பின் சகுந்தலைக்கு என்ன நேர்ந்தது ? மீண்டும் இருவரும் இணைந்தார்களா என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

சகுந்தலையாக சமந்தா, துஷ்யந்த மகாராஜாவாக தேவ் மோகன் இவர்கள் இருவரும் பொருத்தமான ஜோடி என்று சொல்ல வைக்கிறார்கள். குறிப்பாக சமந்தா ஆசிரமத்தில் வளரும் பெண்ணாக, காதலனை நினைத்து ஏங்கித் தவிக்கும் காதலியாக, கணவனால் அவமானப்படுத்தப்படும் மனைவியாக ஒவ்வொரு படிநிலையிலும் தனது நடிப்பில் வித்தியாசம் காட்டி சகுந்தலை கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

தேவ் மோகன் ஒரு இளம் ராஜாவுக்கான களையுடன் கச்சிதமாக நம் மனதில் உள்ளே நுழைகிறார். இனி வரும் நாட்களில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒரு புது ஹீரோ கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

படத்தில் கௌதமி மாதாவாக நடித்துள்ள கௌதமி, கன்வ மகரிஷியாக நடித்துள்ள சச்சின் கடேகர், காஷ்யப முனிவராக நடித்துள்ள நடிகர் கபீர் பேடி, சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு வந்து செல்லும் படகோட்டி பிரகாஷ்ராஜ், கோபக்கார முனிவரான துர்வாசர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்பாபு, மேனகையாக நடித்துள்ள மதுபாலா இவர்கள் அனைவருமே அந்தந்த கதாபாத்திரங்களாகவே தங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்,

அதிலும் குறிப்பாக சமந்தாவின் தோழியாக வரும் அதிதி பாலனுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள். அதை சரியாக பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தில் ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்துமே நம்மை கதை நிகழும் காலகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் விதமாக இருக்கிறது. இவற்றை பார்த்து பார்த்து இழைத்து இருக்கிறார் இயக்குனர் குணசேகர். சாகுந்தலம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *