Damakka.in

Website for Tamil Cinema

ராங்கி ; விமர்சனம்

துணிச்சல் மிகுந்த பத்திரிக்கையாளர் திரிஷா. தனது அண்ணன் மகள் சுஸ்மிதாவின் பேஸ்புக்கிற்கு பல ஆண்களிடம் இருந்து ஆபாச மெசேஜ் வருவதை அறிந்து அதன் பின்னணி என்ன என ஆராய்கிறார்.. உடன் படிக்கும் வேறு ஒரு மாணவி தாழ்வு மனப்பான்மை காரணமாக சுஸ்மிதாவின் பெயர், புகைப்படத்துடன் துவங்கிய பேஸ்புக் பக்கத்தின் மூலமாக தான் எவ்வளவு பிரச்சனைகள் என்பதை அறிந்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு அறிவுரை கூறுவதுடன் நட்பு என்கிற பெயரில் அந்த பேஸ்புக் தொடர்பில் இருந்த காமுகர்கள் அனைவரையும் அழைத்து எச்சரித்து அனுப்புகிறார்.

அதேசமயம் இவர்கள் இல்லாமல் ஆலிம் என்கிற வேறு ஒரு இளைஞனிடம் இருந்து சுஷ்மிதாவின் அந்த பேஸ்புக் பக்கத்திற்கு டீசன்டான அதேசமயம் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமான மெசேஜ் வருகிறது. இது குறித்த ஒரு ஆர்வத்தில் அது யார் என்று அறிய முற்படுகிறார் திரிஷா. போகப்போக அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத கும்பலை சேர்ந்த இளைஞன் என்பது திரிஷாவுக்கு தெரியவருகிறது.

பத்திரிகையாலருக்கே உரிய இயல்பான ஆர்வத்தால் அவனிடமிருந்து மேலும் செய்திகளை பெறுவதற்காக தானே சுஷ்மிதா போன்று பதிலுக்கு மெசேஜ்களை அனுப்புகிறார் திரிஷா. ஒரு கட்டத்தில் அவன் அப்பாவி என்பது தெரிந்தாலும் தொடர்ந்து இந்த உரையாடல்களால் சுஷ்மிதாவுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என அவனுடன் பேசுவதை நிறுத்துகிறார் த்ரிஷா.

ஆனால் சுஸ்மிதாவை காண்பதற்காக சென்னைக்கே கிளம்பி  வருகிறான் அந்த தீவிரவாதி இளைஞன். ஆனாலும் சுஸ்மிதாவை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறான். அவன் வந்து சென்றதை மோப்பம் பிடித்த அந்த நாட்டு போலீஸார் நம் உளவுத்துறை போலீசார் உதவியுடன் அந்த இளைஞனுக்கும் திரிஷாவுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து திரிஷாவையும் அவரது குடும்பத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சுஸ்மிதாவை அவர்கள் பகடைக்காயாக பயன்படுத்தி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். வேறுவழியின்றி கூடவே திரிஷாவும் செல்கிறார். வெளிநாட்டுக்கு சென்றதும் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

ராங்கி என்கிற டைட்டிலுக்கு ஏற்றபடி டேர்டெவில் பெண்ணாக படம் முழுவதும் தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியுள்ளார் திரிஷா. வாகன சோதனை என்கிற பெயரில் தன்னை மடக்கும் போலீஸ்காரரிடம் கெத்து காட்டும்போதும் பின்னால் என்ன நடக்கும் என்கிற விபரீதம் அறியாமல், செய்தியை உடனே வெளிப்படுத்தும் ஒரு நேர்மையான நிருபராகவும் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியுள்ளார் திரிஷா.

சோஷியல் மீடியா மூலமாக பெண்களிடம் வம்பு செய்பவர்களை அவர்கள் டீல் செய்யும் விதம் வெகு நேர்த்தி. கிளைமாக்ஸில் சாகச காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் திரிஷா.

திரிஷாவின் அண்ணன் மகள் சுஷ்மிதாவாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். டீனேஜ் பருவத்தில் உள்ள குணாதிசயங்களை அழகாக பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக அத்தையை போல துணிச்சலான பெண்ணாக மாற அவர் விரும்பினாலும் கிளைமாக்ஸ் காட்சியில் பதட்டத்தையும் பயத்தையும் ஒன்று சேர வெளிப்படுத்தி அவருக்கு என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பை நம்மிடம் ஏற்படுத்தி விடுகிறார்.

தீவிரவாத கும்பலை சேர்ந்த இளைஞானாக நடித்திருக்கும் ஆலிம் ஒரு பக்கம் கொள்கை, இன்னொரு பக்கம் காதல் என இரண்டு உணர்வுகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு அந்த உணர்வுகளுடன் தனது குழப்பமான மனநிலையையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் ஒரு அழகான இளம் ஹீரோவாக இவர் உருவெடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தன்னிடம் வம்பிழுக்கும் போலீஸ் அதிகாரிக்கு திரிஷா வித்தியாசமாக பாடம் புகட்டுவார் என எதிர்பார்த்தால் அவருக்கு வேறு விதமாக தண்டனை கிடைப்பதில் நமக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

உஸ்பெகிஸ்தானில் படமாக்கப்பட்ட தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்ட லொக்கேஷன்களும் பிரமிக்க வைக்கின்றன. தீவிரவாதி ஆனாலும் அவனுக்குள்ளும் இருக்கும் ஒரு காதல் உணர்வு, கண்டிப்பான பத்திரிகையாளராக இருந்தாலும் முகம் தெரியாத நபர் மீது ஏற்படும் இனம் தெரியாத ஈர்ப்பு என இரண்டு தரப்பையும் சமமாக பேலன்ஸ் செய்து இருக்கிறது ஏஆர் முருகதாஸின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் கதை.

அதேசமயம் சோஷியல் மீடியா மூலம் இன்றைய இளைஞர்கள் தங்களை அறியாமலேயே எதிர்கொள்ள காத்திருக்கும் அபாயம் குறித்தும் இந்தப்படம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல் இசையமைப்பாளர் சத்யா இருவரும் சேர்ந்து படத்தின் விறுவிறுப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இடைவேளை வரை படம் போவதே தெரியாமல் அவ்வளவு ஸ்பீடு. அதேசமயம் இடைவேளை வரை 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த இயக்குனர் சரவணன் இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் கதை எந்த பக்கம் நகர்கிறது என்கிற குழப்பத்தை ரசிகர்களுக்கு உருவாக்கி விடுவதால் ஸ்பீடு பிரேக்கர் போட்டதுபோல வேகமும் குறைந்து விடுகிறது.

குறிப்பாக த்ரிஷா அந்த தீவிரவாத இளைஞனிடம் தொடர்ந்த பேசுவதன் மோளம் என்ன சாதிக்க நினைக்கிறார் என்பதை இன்னும் அழுத்தமாக கூறியிருக்கலாம.  ஆனாலும் வழக்கமான தீவிரவாத படம் போல கிளிஷேவாக இல்லாமல் இந்த படத்தை ஒரு புதிய முயற்சியாக கொடுத்ததற்காக இயக்குனர் சரவணனை தாராளமாக பாராட்டலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *