Damakka.in

Website for Tamil Cinema

பீட்சா  3 – தி மம்மி ; விமர்சனம்

ஏற்கனவே பீட்சா படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் தற்போது மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்கமனு, பவித்ரா மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பீட்சா 3 தி மம்மி.

நவீன உணவகம் ஒன்றை நடத்தி வரும் அஸ்வின் காக்கமனு காவல் ஆய்வாளர் கவுரவின் தங்கை பவித்ராவை காதலிக்கிறார். நளனின் உணவகத்தில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. அதன் பின்னணியில் ஒரு புதுவகையான ஸ்வீட்டும், ஒரு பெண் குழந்தையின் ஆவியும் இருப்பது அவருக்கு தெரிய வருகிறது.

ஆனாலும். அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கும் அஸ்வின் மீது மேலும் 2 கொலைப் பழிகள் விழுகின்றன. அதைச் செய்தது யார், நளனுக்கும் அந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு, யார் அந்த குழந்தை, எதற்காக அந்த ஸ்வீட் ஆகியவற்றுக்கு விடை சொல்கிறது படத்தின் மீதி கதை.

அஸ்வின் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடிப்பு திறமையை காட்டியுள்ளார். கோபம், காதல், சோகம் என நுண்ணிய உணர்வுகளை சரியாக கடத்தியுள்ளார். குறிப்பாக அந்த மனுஷ்ய சக்தி ஏன் தன்னை தேடி வந்தது என தெரிய வரும்போது துல்லியமான அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி பவித்ரா ஆரம்பத்தில் வழக்கமான காதலியாக வந்தாலும் பின்னர் கதாநாயகனின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் விதமாக களமிறங்கும் போது கவனம் பெறுகிறார்.

ஹோட்டல் செப் ஆக காளி வெங்கட், குரைஷி, போலீஸ் அதிகாரியாக வரும் கவுரவ் நாராயணன், இரண்டாம் பாதியில் பாசமான தாய் ராணியாக அனுபமா குமார், இவரது மகள் மித்ராவாக அபி நக்ஷத்ரா, வில்லனாக வரும் கவிதா பாரதி ஆகியோர் கதாபாத்திரத்திற்கேற்ற பொருத்தமான தேர்வு என நிரூபித்துள்ளனர்.

பிரபு ராகவ் ஒளிப்பதிவு, இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு, அருண் ராஜ் இசை மற்றும் பின்னணி இசை  இரண்டுமே படத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் என கூறலாம். அஸ்வினின் உணவகத்தில் திடீரென பிரபலமாகிவிடும் புதியவகை இனிப்பும் அதன் பின்னணியில் நூல் பிடித்தபடி விலகத்தொடங்கும் மர்ம முடிச்சுகளும் தங்கு தடையற்ற திரை அனுபவத்தைச் சாத்தியமாக்கிவிடுகின்றன.

அவ்வப்போது அணைந்து எரியும் விளக்குகள், வெள்ளை உடையில் தலைவிரிகோலமாக வரும் பேய்கள் ரத்தம் தேய்ந்த முகங்கள் என பல பேய்படங்களில் வந்த காட்சிகளே பீட்சா 3 படத்திலும் வந்துள்ளது. பேய்கள் கொலை செய்வதற்க்கான காரணங்களும் நம்மால் அனுமானம் செய்ய முடிவதும் ஒரு குறையே.

சிறுமிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபடுபவர்களில் பலர் அந்த சிறுமிகளுக்கும், சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற சமூகம் சார்ந்த பிரச்சனையை பீட்சா 3 கதையாக எடுத்துள்ளார் இயக்குநர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *