Damakka.in

Website for Tamil Cinema

பாசக்கார பய ; விமர்சனம்

கிராமத்தில் உள்ள பணக்கார இளைஞன் பிரதாப், தாயில்லாமல் தந்தையுடன் வசிக்கும் காயத்ரியை விரும்புகிறார். ஆனால் காயத்ரியோ ஜெயிலில் இருக்கும் தனது தாய்மாமன் விக்னேஷை தான் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறி பிரதாப்பின் காதலை மறுக்கிறார்.

ஜெயிலில் இருந்து திரும்பி வரும் விக்னேஷ் தன் மாமன் மகள் தன் மீது வைத்துள்ள அன்பை உணர்ந்தாலும் காயத்ரியை தன் மனைவியாக ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பிரதாப்பிற்கும் காயத்ரிக்கும் தொடர்பு இருப்பதாக கூட அபாண்டமாக பழி சுமத்துகிறார்.

விக்னேஷ் எதற்காக இப்படி செய்கிறார் ? காயத்ரி விக்னேஷை மணந்தாரா ? இல்லை காயத்ரியுடன் பிரதாப்பின் காதல் கை கூடியதா என்பது மீதிக்கதை.

ஒரு கிராமத்தில் நடக்கும் காதல், வட்டிக்கு பணம் கொடுத்து ஏழைகளை துன்புறுத்தும் வில்லன், சகோதரிக்காக ஜெயிலுக்கு சென்ற தம்பி என எதார்த்த மனிதர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளார்கள்.

நீண்ட நாளைக்கு பிறகு நடிகர் விக்னேஷை ஒரு கிராமத்து கதாபாத்திரத்தில் பார்க்க முடிவது மகிழ்ச்சியைத் தருகிறது. ஜெயிலில் இருக்கும் போதும் சரி, கிராமத்திற்கு வந்த பின்னும் சரி, தாய்மாமன் என்கிற முறையில் அக்கா மகளின் அன்புக்கு பாத்திரமாகவும் சரி, எல்லாவித உணர்வுகளையும் கலவையாக வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ். அவர் எதற்காக காயத்திரி மீது கோபப்படுகிறார் என்கிற விஷயம் தெரிய வரும்போது அவர் மீது நமக்கு மதிப்பு கூடுகிறது.

கிராமத்து இளைஞனாக பிரதாப்.. தன் காதலி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்யும் விஷயங்கள் எல்லாம் சுவரில்லாத சித்திரங்கள் பாக்கியராஜ் பார்த்ததைப் போல மீண்டும் நினைவுபடுத்துகின்றன. பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் முக்கிய தூண் என்றால் அது இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் நாயகி காயத்ரி தான். அம்மாவாகவும் மகளாகவும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ளவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கஞ்சா கருப்பு தன்னால் முடிந்த அளவிற்கு நகைச்சுவையில் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

கதை தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல இருப்பதால் காட்சிகளில் சற்று வேகம், விறுவிறுப்பு குறைவாக இருப்பது போன்று தோன்றுகிறது. குடும்ப உறவுகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கும் இந்த பாசக்கார பய நிச்சயம் நம் மனதில் இடம் பிடிப்பான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *