ஹேக்கிங் சாஃப்ட்வேர் சம்பந்தப்பட்ட தொழில் ஒன்றை தனது நண்பர் விவேக் பிரசன்னாவுடன் இணைந்து கவனித்து வருகிறார் விக்ரம் பிரபு. அவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாதிப்பால் அதிக வெளிச்சம் இருக்கும் இடங்களில் மட்டுமே பார்வை ஓரளவுக்கு நன்றாக தெரியும். குறைவான வெளிச்சத்தில் அனைத்துமே மங்கலாக தெரியும்.
இப்படிப்பட்ட சூழலில் ஓரிருமுறை தனக்கு அறிமுகம் இல்லாத நபர்களுடன் வேறு பிரச்சனைகளுக்காக விக்ரம் பிரபு மோத வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எதிரிகள் ஒரு பக்கம் இவரை துரத்தினாலும் எதிர்பாராத விதமாக அவரது தந்தையையே கொல்கிறார்கள். தன்னுடைய பிரச்சனைக்காகத்தான் தந்தை கொல்லப்பட்டார் என ஆரம்பத்தில் நினைக்கும் விக்ரம் பிரபுவுக்கு போகப்போக இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது.
யார் அவர்கள், தன் தந்தையை ஏன் அவர்கள் கொல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை தேடும் விக்ரம் பிரபுவுக்கு அதிர்ச்சி கலந்த விடை கிடைக்கிறது. தந்தையின் சாவுக்கு பழி தீர்த்தாரா விக்ரம் பிரபு ? இதுதான் மீதிக்கதை.
விக்ரம் பிரபுவு வழக்கம் போல ஒரு பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் வழக்கமான மிகை இல்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். பார்வை குறைபாட்டை வெளிப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள காட்சிகள் ரொம்பவே எதார்த்தம். அருகில் இருந்தும் கூட தந்தையை காப்பாற்ற முடியாமல் போகும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
கதைக்கு பக்கபலமாக இல்லை என்றாலும் கதையின் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு படம் முழுவதும் பக்கபலமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வாணி போஜன். அதேபோல நாயகனுடன் இணைந்து பயணிக்கும் விவேக் பிரசன்னாவும் தனது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்.
வடசென்னை பகுதி அரசியல்வாதி வில்லனாக நடித்திருக்கும் தனஞ்செயா உண்மையிலேயே மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் மெயின் வில்லனாக நடிப்பதற்கு தகுதியான நபராகத் தெரிகிறார்.
கொஞ்ச நேரமே வந்து போகும் நல்ல அரசியல்வாதியாக வேலா ராமமூர்த்தி. விக்ரம் பிரபுவின் தந்தையாக பாசத்தை கொட்டும் ஆனந்த் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
கதாநாயகனுக்கு பார்வை பிரச்சனை இருக்கிறது என்று புதிதாக யோசித்த இயக்குனர் கார்த்திக் அத்வைத் அதை பல இடங்களில் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதேசமயம் அந்த பிரச்சனையை வைத்து இன்னும் சில காட்சிகளை புத்திசாலித்தனமாக வடிவமைத்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
கிளைமாக்ஸில் வில்லனை பழிவாங்க விக்ரம் பிரபு எடுக்கும் முயற்சிகள் வித்தியாசமாக இருந்தாலும் அதில் கொஞ்சம் செயற்கைத்தனம் இழையோடுவதை தவிர்த்து இருக்கலாம். பாயும் ஒளி நீ எனக்கு என பாரதியார் கவிதை வரியில் ஒரு திருப்தியான ஆக்சன் படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.