Damakka.in

Website for Tamil Cinema

மெமரீஸ் ; விமர்சனம்

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி நடித்துள்ள படம் தான் இந்த மெமரீஸ். கதைக்கு ஏற்றார்போல் ஞாபகங்களை வைத்து விளையாடும் விதமாக ஒரு புதிய கோணத்தில் இந்த கதையை உருவாக்கி உள்ளார்கள்.
ஒரு மனோதத்துவ மருத்துவரின் பிடியில் இருந்து தப்பிக்கும் வெற்றிக்கு தான் யார் என்பதே மறந்து போய்விட்ட நிலை.. கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு தான் யார் என்பதை கண்டறியும் வெற்றிக்கு, தான் இரண்டு கொலைகளை செய்து விட்டதும் அதில் ஒன்று தனது காதலி பார்வதி அருண் என்பதும் தெரிய வந்து ரொம்பவே அதிர்ச்சி அடைகிறார்.
எதற்காக இந்த கொலைகளை செய்தேன் என அவர் நினைவுபடுத்தி பார்க்கும்போது அதன் பின்னணியில் ஒரு கதை நகர்கிறது. போலீஸ் தேடுதலில் இருந்து தப்பித்த வெற்றி ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் அவர்களிடமே சரண்டர் ஆகும்போது அவர் இரண்டு கொலைகளை செய்யவில்லை நான்கு கொலைகள் செய்துள்ளார் என புதிதாக குற்றம் சுமத்தப்படுகிறார்.
இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்த கொலைகளை செய்ததெல்லாம் வேறு ஒரு நபர் என்றும் அந்த நபரை தந்திரமாக கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி தான் வெற்றி என்றும் ஒரு ட்விஸ்ட் கொடுத்து திரைக்கதை யூ டர்ன் அடிக்கிறது.
அப்படியானால் உண்மையான குற்றவாளி யார் > வெற்றி எதற்காக இப்படி நாடகமாடினார் என நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, மீண்டும் திரைக்கதை வேறு ரூட்டில் பயணிக்கிறது. கடைசியில் இந்த நிகழ்வுகளின் சூத்திரதாரி யார் என சுட்டிக்காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தி படம் முடிகிறது.
இதற்கு முன்பு வெற்றி நடித்த ஜீவி மற்றும் ஜிவி 2 படங்கள் பாணியில் இன்னும் சொல்லப்போனால் அதைவிட இன்னும் சிக்கலான முடிச்சுகளோடு திரைக்கதை பயணிக்கிறது. அதன் கூடவே நாமும் கவனமாக பயணித்தால் தான் எந்தவித குழப்பமும் இல்லாமல் கதையை புரிந்து கொள்ள முடியும் என்கிற அளவிற்கு ஜிக்ஜாக்காக பயணிக்கிறது இந்த படம்.
இந்த கதாபாத்திரத்திற்கு என்று உருவாக்கப்பட்டது போல அம்சமாக பொருந்துகிறார் நடிகர் வெற்றி. அதற்கேற்ற மாதிரி கதைக்கு தேவையான சிறப்பான நடிப்பையும் அவர் வெளிப்படுத்த தவறவில்லை. படத்தில் பெரும்பாலான நேரம் அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். நாமும் அவர் கூட சேர்ந்து போடுவது போன்று ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தில் மற்ற கதாபாத்திரங்களாக போலீஸ் அதிகாரியாக வரும் ரமேஷ் திலக், பேட்டியாளராக வந்து திடீரென மனநல மருத்துவராக இன்னொரு பரிமாணம் காட்டும் ஹரிஷ் பெராடி, அதே போல டாக்டராக வரும் டயானா மற்றும் சஜில் கொஞ்ச நேரமே வந்தாலும் கதைக்கு திருப்பம் தரும் கதாபாத்திரமாக பார்வதி அருண் என எல்லோருமே இந்த சிக்கலான திரைக்கதைக்குள் ஒன்றுக்கு இரண்டு கதாபாத்திரங்களாக மாறி மாறி தங்களை பிரதிபலித்துள்ளார்கள்.
ஒரு மனிதனின் மூளையிலிருந்து அவனது பழைய நினைவுகளை அழித்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நினைவுகளை புகுத்த முடியும் என்கிற விஞ்ஞான கண்டுபிடிப்பை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி படத்தை இயக்கியும் உள்ளார்கள் ஷியாம் – பிரவீண் இரட்டை இயக்குனர்கள்.
படத்தை எடுத்த அவர்களை விட இந்த படத்திற்கு பரபரப்பாக ஓடி ஒளிப்பதிவு செய்த அர்மோ மற்றும் கிரண் நுப்பிட்டால் ஆகியோரை தான் சாதனையாளர்கள் என்று சொல்ல வேண்டும். இவர்களை விட படத்தை ஓரளவுக்கு குழப்பம் இல்லாமல் நேர்த்தியாக படத்தொகுப்பு செய்துள்ள எடிட்டர் சான் லோகேஷ் கோவில் கட்டி கும்பிடப்பட வேண்டியவ.
அதேபோல அஜயன் பாலாவின் வசனங்களும் அங்கங்கே பளிச்சிடுகின்றன. இடைவேளை வரை விறுவிறுப்புடன் இந்த கதை எப்படி போகுமோ என்கிற ஒரு ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இயக்குனர்கள், இடைவேளைக்குப் பிறகு விதவிதமாக கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி நம் முன் அறிமுகப்படுத்தும்போது அவர்களை முதலில் வேறொருவராக நினைத்து பின்தொடர்ந்த நாம் மீண்டும் புதிய கதாபாத்திரத்தில் அவர்களை தொடர்வதற்கு சிரமப்படுகிறோம் என்பதை மறுக்க முடியாது. கதையின் பலவீனமும் அதுதான் என்று கூட சொல்லலாம். இருந்தாலும் ஒரு வித்தியாசமான சைக்காலஜி த்ரில்லர் படத்தை விரும்புவர்களுக்கு இந்த படம் நிச்சயம் திருப்தி தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *