Damakka.in

Website for Tamil Cinema

மாமன்னன் ; விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையை ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், இந்த மாமன்னன் படத்தில் அரசியல் அங்கீகாரம் பெற்றும் கூட ஒடுக்கப்பட்டவர்களாகவே இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி அலசியுள்ளார்.

சேலம் பகுதியில் உள்ள ஒரு தனி தொகுதியில் மக்கள் செல்வாக்கு கொண்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மாமன்னன் என்கிற வடிவேலு. காலப்போக்கில் அந்த பகுதியில் எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட்டு பத்து வருடங்களாக பொறுப்பு வகித்து வருகிறார். ஆனாலும் அதே கட்சியில் உள்ள வேறு ஜாதியை சேர்ந்த தலைவர்களிடம் அவர் கைகட்டியே நிற்கிறார். சிறுவயதில் தனது நண்பர்களுக்கு நடந்த அநீதிக்கு தனது தந்தை சரியாக தீர்வு காணவில்லை என அவருடன் பேசாமலேயே ஒதுங்கி இருக்கிறார் வடிவேலுவின் மகன் உதயநிதி.

அதுமட்டுமல்ல தன் தோழி கீர்த்தி சுரேஷின் பிரச்சனையில் தான் தலையிட்டு மாவட்ட செயலாளர் பஹத் பாசிலின் எதிர்ப்பையும் சம்பாதிக்கிறார். சமரசம் செய்ய சென்ற இடத்தில் தனது தந்தை தன்னைவிட வயதில் குறைந்த பஹத் பாசிலின் முன் கைகட்டி நிற்பதை பார்த்து கோபம் கொண்டு தனது எதிர்ப்பை தெரிவிக்கிறார் உதயநிதி. இது இருவருக்குமான கைகலப்பில் முடிந்து மிகப்பெரிய பகையாக மாறுகிறது.

அடுத்து வந்த நாட்களில் கட்சியின் மாவட்ட செயலாளரான பஹத் பாசிலின் கை ஓங்கியதா, இல்லை அதே கட்சியில் பெருமதிப்பு பெற்ற வடிவேலுவின் தரப்பு நியாயம் பெற்றதா என்பது தான் மீதிக்கதை.

இயக்குனர் மாரி செல்வராஜ், ஹீரோ உதயநிதி ஆகியோர் ஏற்கனவே கூறியது போன்று இந்த படத்தின் கதையின் நாயகன் என்றால் அது மாமன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலு தான். இந்த 30 வருடங்களில் இப்படி ஒரு வடிவேலுவை எந்த காலகட்டத்திலும் நாம் பார்த்ததில்லை. அப்படியே முற்றிலுமாக தன்னை அந்த மாமன்னன் கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டுள்ளார் வடிவேலு. படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அவர் காட்டும் நிதானமும் மிதமான கோபமும் அவர் பேசும் வனங்களும் அவர் மீதான மரியாதையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றன. இந்த படத்தில் இருந்து வடிவேலுவின் திரை வாழ்க்கை வேறு விதமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கியத்துவத்தை வடிவேலுக்கு விட்டுக்கொடுத்து விட்டாலும் இந்த கதையில் தனக்கான கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் உதயநிதி. சற்றே சீரியஸான கதாபாத்திரம் என்பதால் வடிவேலுவை போன்று இவரும் நகைச்சுவையை முற்றிலும் தவிர்த்து விட்டு கதைக்கு என்ன தேவையோ அதை நோக்கியே தனது நடிப்பில் பயணித்துள்ளார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இன்றைய இளைஞனின் எண்ண ஓட்டத்தை, மன வலியை ஒவ்வொரு காட்சியிலும் சரியாக பிரதிபலித்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் துணிச்சல் மிகுந்த, ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். இவர்கள் மூவருக்கும் ஈடு கொடுக்கும் விதமாக வில்லனாக பஹத் பாசில். தன்னுடைய ஜாதியின் ஆதிக்கம் தான் எப்போதும் ஓங்கி இருக்க வேண்டும், ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும் தனக்கு கீழே தான் கைகட்டி.விட்டு நிற்க வேண்டும் என்கிற தனது மனப்போக்கை, அதனால் ஏற்படும் ஈகோவை படம் முழுக்க தொய்வில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் நடத்தும் நாய் ரேஸும் அதன்பிறகு அவர் நடந்து கொள்ளும் விதமும் நம்மை மிரள வைக்கின்றன.

பொறுப்பான, சமூக நீதிக்கு காவலாக நிற்கிற முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிகர் லால் தனது பக்குவமான நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் எங்கேயும் துருத்திக் கொண்டு நிற்காமல் கதையின் போக்கில் இயல்பான சராசரி மனிதர்களாகவே வலம் வருகின்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கான விறுவிறுப்பை கச்சிதமாக கூட்டி இருக்கிறது. இதுபோன்ற படங்களின் பாடல்களில் ஏ.ஆர் ரகுமான் வித்தியாசப்பட்டு தனித்து தெரிகிறார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் படங்கள் எப்போதும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கான நியாயத்திற்கான போராட்டமாகவும் இருக்கும். அதே சமயம் எந்த ஒரு ஜாதியையும் அவர் குறிப்பிட்டு விமர்சிக்காமல் ஆதிக்க ஜாதி என்கிற பார்வையிலேயே தனது படங்களை எடுத்து வருகிறார். இந்த படத்திலும் அதையே தான் தொடர்ந்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் கொடுத்துள்ள முடிவு எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது.

ஜாதியை வெறுப்பவர்களுக்கும் ஜாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும். ஜாதியை பிடித்துக் கொண்டு திரியும் நபர்களுக்கு இந்த படம் வேப்பங்காயாக கசக்கும். ஆயிரம் குறைகள் சொல்லத்தான் செய்வார்கள்.. அதை எல்லாம் புறந்தள்ளி விட்டு பார்த்தால் இந்த மாமன்னன் உண்மையிலேயே மக்கள் விரும்பும் மகா மன்னன் தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *