Damakka.in

Website for Tamil Cinema

குடிமகான் ; விமர்சனம்

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை பார்க்கும் இளைஞன் விஜய் சிவன். மனைவி சாந்தினி.. இரண்டு குழந்தைகள், தந்தை சுரேஷ் சக்கரவர்த்தி என நடுத்தர வர்க்கத்து குடும்பமாக வாழ்க்கையை ஓட்டுகிறார். இடையில் எதிர்பாராத வித்தியாசமான பிரச்சனையாக குடிப்பழக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் டீ, கூல்டிரிங்ஸ் என எது குடித்தாலும் அவருக்கு போதை ஏறி தன் நிலை மறக்கிறார்.

இதனால் ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய் நோட்டு வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட, அதன் மூலம் பல லட்சம் இழப்புக்கு காரணமாகி வேலையை இழக்கிறார். இழந்த வேலையை திரும்பப் பெறுவதற்காக, இப்படி தவறாக வந்த பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களை தேடிச்சென்று அந்த பணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார் விஜய் சிவன்.

இதற்கு ஆதரவாக உள்ளூர் கோஷ்ட்டியான நமோ நாராயணன் அண்ட் கோ இவருக்கு உதவியாக இணைகிறார்கள் அந்த பணத்தை பெறுவதற்காக இவர்கள் நடத்தும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி படம். அந்த பணம் முழுவதையும் கைப்பற்றினாரா ? மீண்டும் விஜய் சிவனுக்கு வேலை கிடைத்ததா என்பதே கிளைமாக்ஸ்.

குடி மகான் என டைட்டில் வைத்திருக்கிறார்களே, குடி சம்பந்தப்பட்ட படமோ என்று நினைத்து குடியே பிடிக்காதவர்கள் படத்திற்கு செல்லாமல் இருந்துவிட வேண்டாம். அப்படி இருந்தால் ஒரு நல்ல காமெடி படத்தை நீங்கள் தவற விட்டுவிடுவீர்கள் என்று சொல்லும் அளவிற்கு படம் முழுவதும் பல இடங்களில் ரசித்து சிரிக்கும் அளவிற்கு இந்த குடிமகான் படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் தான் அறிமுகமாகி இருக்கிறார் என்றாலும் ஒரு அறிமுக நாயகன் என சொல்ல முடியாத அளவிற்கு வெகு இயல்பான நடிப்பில் அந்த கதாபாத்திரமாக மாறியுள்ளார் நடிகர் விஜய் சிவன். படத்தின் தயாரிப்பாளரும் இவரே என்பதுதான் ஆச்சரியம். புதியதாக நடிக்க வரும் செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இவரை பார்த்து தங்களது முதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

குடிக்காமலேயே இவர் பண்ணும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. இவரது மனைவியாக நடுத்தர வர்க்கத்துக்கு குடும்பத்து பெண்ணாக சாந்தினி ரசிக்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். குடும்பத்தலைவராக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கும் லூட்டிகள் பல நேரங்களில் ரசிக்க வைக்கின்றன. பல நேரங்களில் சகித்துக் கொள்ள வைக்கின்றன.

இதனால் வரை சில படங்களில் வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமோ நாராயணன் நாடோடிகள் படத்திற்கு பிறகு இதில் சொல்லிக் கொள்ளும்படியாக அதிக நேரம் பயணித்து கலகலப்பை ஏற்படுத்துகிறார். அவருடன் வரும் அவரது சிஷ்யர்களும் அடிக்கடி கிச்சுக்கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் சமீபத்தில் உணவை டெலிவரி செய்யும் இளைஞருடன் அவர்கள் அடிக்கும் லூட்டி விலா நோக சிரிக்க வைக்கிறது.

நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் ஒரு வழியாக கல்யாண மாப்பிள்ளை ஆக மாறும் சேதுராமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் அக்மார்க் காமெடி ரகம்.

நகைச்சுவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த படத்தின் சதையை எழுதியுள்ள ஸ்ரீ குமாரும் இந்த படத்தை தொய்வில்லாமல் இயக்கியுள்ள என், பிரகாஷுக்கும் நிச்சயமாக நல்ல எதிர்காலம் உள்ளது என்பது மட்டும் உண்மை.

மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று ரசித்து சிரிக்க கூடிய படம் தான் இந்த குடிமகான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *