நடிகர்கள் ; வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ், சென்றாயன் மற்றும் பலர்
இசை ; சாம் சி.எஸ்
டைரக்சன் ; தயாள் பத்மநாபன்
ரேட்டிங் ; 3.5 / 5
சில நிமிட சஞ்சலம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடும் என்பதற்கு உதாரணமாக வெளியாகி உள்ள படம்தான் இந்த கொன்றால் பாவம்.
எண்பதுகளின் துவக்கத்தில் நடக்கும் கதை இது. வரலட்சுமி, அப்பா சார்லி, அம்மா ஈஸ்வரி ராவ் என கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தங்களது நிலத்தில், ஒரு சாதாரண வீட்டில் அன்றாட செலவுக்கே சிரமப்பட்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். ஒரு பக்கம் பருவ வயது தாண்டியும் கல்யாண கனவுகளுடன் மட்டுமே வாழ்க்கை நடத்தும் வரலட்சுமி.. ஒரு பக்கம் வட்டிக்காரன் கொடுத்த பணத்திற்கு வட்டியாக வரலட்சுமியையே கைப்பற்ற நினைக்கிறான்.
இந்த நிலையில் குடுகுடுப்பைக்காரன் ஒருவன் இன்று உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் தேடிவர போகிறது என்று கூற அவனது பேச்சை உதாசீனப்படுத்துகிறார்கள். அன்றைய தினம் வழிப்போக்கனான சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டிற்கு வந்து இன்று இரவு தங்கிக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்க, போனால் போகிறது என்று அரை மனதுடன் சம்மதிக்கிறார்கள்.
அப்போது அவரிடம் நிறைய பணமும் நகைகளும் இருப்பதை பார்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் வரலட்சுமி, அந்த பணம் முழுவதையும் தங்களுக்கே சொந்தமாக்கி கொண்டால் மொத்த பிரச்சனைக்கும் விடிவு கிடைக்கும் என குறுக்கு புத்தியுடன் ஒரு முடிவு எடுக்கிறார்.
அதற்காக அவர் செய்ய துணிந்த காரியம் என்ன ? அதனால் சந்தோஷ் பிரதாப்புக்கு என்ன ஆனது? வரலட்சுமி எடுத்த முடிவு அவருக்கு சாதகமாக அமைந்ததா ? இல்லை மேலும் சங்கடத்தை உண்டாக்கியதா என்பது மீதி கதை.
இப்போது போல் அல்ல, எண்பதுகளின் காலகட்டங்களில் வயதுக்கு வந்த பெண்களை வீட்டில் வைத்திருப்பதே மிகப்பெரிய பாவமாகவே பார்க்கப்பட்ட ஒன்று. குறிப்பாக திருமணமாகாத பெண்களின் மனதில் ஒரு சிலருக்கு ஏற்படும் தடுமாற்றம் எந்த வகையான விபரீதத்தில் சென்று முடியும் என்பதை அழகாக இந்த படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன்.
இந்த கதாபாத்திரத்திற்கு நடிகை வரலட்சுமியை தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. சராசரி ஆசாபாசங்கள் கொண்ட கிராமத்து பெண்ணாக, துடுக்குத்தனமும் எதிர்கால கனவுகள் குறித்த சுயநலமும் கொண்ட ஒரு பெண்ணாக தனது மல்லிகா கதாபாத்திரத்தை அழகாக பிரதிபலித்துள்ளார். குறிப்பாக சந்தோஷ் பிரதாப்புடன் அவர் மேற்கொள்ளும் உரையாடல் மற்றும் நடவடிக்கைகள் சில பெண்களின் மனதில் இப்போதும் ஒளிந்திருக்கும் ரசாபாசங்களை வெளிப்படுத்த தவறவில்லை. சந்தோஷ் பிரதாப் விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவும் அதை செயல்படுத்தும் அவரது துணிச்சலும் திக் திக் ரகம்.
நாயகன் சந்தோஷ் பிரதாப் இந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார். சில நேரங்களில் எப்போது விளையாட்டாக இருக்க வேண்டும் எப்போது சீரியஸ் ஆக இருக்க வேண்டும் என்பதை படம் பார்ப்பவர்களுக்கு தனது கதாபாத்திரம் மூலம் பாடமாகவே எடுத்துள்ளார் சந்தோஷ் பிரதாப்.
சார்லியின் நடிப்பு பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன ? வயதுக்கு வந்த மகளை கட்டிக்கொடுக்க முடியாத கையாலாகாத்தனத்தையும் வேதனையையும் அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார்.
சரி, தப்பு என முடிவெடுக்க முடியாத சூழ்நிலை கைதியாக தனது உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் வரலட்சுமியின் அம்மாவாக நடித்துள்ள ஈஸ்வரி ராவ். மகளின் அதிகாரக்குரல் முன்பாக அடங்கிப் போகும் ஈஸ்வரி ராவ் இன்றைய பல அம்மாக்களின் பிம்பமாகவே தெரிகிறார்.
இரண்டே காட்சிகளில் வந்தாலும் கண்பார்வையற்ற சென்றாயனின் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. வெகு குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களை வைத்து ஒரேநாளில் நடக்கும் நிகழ்வாக ஒரு திரில்லிங் மற்றும் எமோஷனலான கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் தயாள் பத்மநாபன். அவர் நினைத்த காட்சிகளை வீரியமான பின்னணி இசையுடன் நம்மிடம் அழகாக கடத்துகிறது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை.
கிளைமாக்ஸில் சந்தோஷ் பிரதாப் பற்றிய உண்மை தெரிய வரும்போது நம்மால் அதிர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. விதி ஆடும் விளையாட்டில் சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரத்தை குறை சொல்வதா ? அல்லது வரலட்சுமியின் கதாபாத்திரம் எடுக்கும் முடிவை குறை சொல்வதா ? படம் பார்க்கும் ரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்..
இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம் என்றாலும் ஒரே லொகேஷனில் பெரும்பாலான படம் நகர்ந்தாலும் எங்கேயும் போரடிக்காமல் அடுத்து என்ன நடக்கும் என்கிற விறுவிறுப்புடன், நம்மை இருக்காய் நுனியில் அமரவைக்கும் விதமாக இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் தயாள் பத்மநாபன் நிச்சயம் கவனிக்கத்தக்க இயக்குனராக தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பார் என தாராளமாக சொல்லலாம்.