Damakka.in

Website for Tamil Cinema

கடைசி காதல் கதை ; விமர்சனம்

அது என்ன கடைசி காதல் கதை என்கிறீர்களா..?

உலகில் தோன்றிய முதல் காதல் ஆதாம் ஏவாள் காதல்.. இங்கே காதல் தோல்வி அடைந்த இளைஞன் அதற்காக தற்கொலை முயற்சியையோ, கொலை செய்யும் எண்ணத்தையோ நாடாமல், அனைவரையும் ஆதம், ஏவாளாக மாற்றும் விபரீத முயற்சியில் இறங்குகிறான்.. விளைவு என்ன ஆனது..?

நாயகன் ஆகாஷ் பிரேம் குமார், புகழ், விஜே ஆஷிக் இவர்கள் அனைவரும் நண்பர்கள். நண்பர்கள் அனைவருக்கும் காதல் செட் ஆகி விட, ஒரு வழியாகவும் இறுதியாகவும் நாயகன் ஆகாஷுக்கும் காதல் செட் ஆகிறது. காதலியாக ஏனாக்‌ஷி கிடைக்கிறார்.

காதலிக்கிறேன் என்று கூறி தனது காதலன் ஆகாஷிற்கு நிபந்தனையும் விதிக்கிறார் ஏனாக்‌ஷி. மற்ற காதலர்கள் போல் இல்லாமல், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் காதலிக்கலாம் என்று கூறி விடுகிறார் ஏனாக்‌ஷி.

காதலி கிடைத்தால் போதும் என்று முதலில் ஒத்துக் கொள்ளும் நாயகன், போக போக நண்பனின் தூண்டுதலால் காதலியை தொட்டுப் பார்க்க நினைக்கிறார். அது விபரீதத்தில் முடிய, தனது காதலை முறித்துக் கொள்கிறார் ஏனாக்‌ஷி.

காதலி விட்டுச்சென்றதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுகிறார் ஆகாஷ்.

அங்கிருந்து வெளியே வரும் ஆகாஷ் தான் மேலே சொன்னபடி, ஒரு விபரீதமான முடிவு ஒன்றை எடுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த புதுமுகங்கள் அனைவரும் தங்களுக்கான காட்சியை மிகவும் அழகாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். நாயகனாக ஆகாஷ், தனது நடிப்பை நடிப்பாக கொடுக்காமல் கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்து காட்டியிருக்கிறார். புகழின் காமெடி காட்சிகள் சின்னத்திரையில் எடுபட்டாலும், வெள்ளித்திரையில் இன்னும் பயிற்சி வேண்டும் என்று தான் கூறத் தோன்றுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சாம்ஸின் காமெடி காட்சிகள் படம் முழுக்க எடுபட்டிருக்கிறது. அதில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இரட்டை அர்த்த வசனங்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், அதை ரசிக்கும் படியாக கொடுத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திழுத்திருக்கிறார் இயக்குனர் ஆர் கே வி.

கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில், கொடுக்கப்பட்ட நடிகர்களைக் கொண்டு நல்லதொரு எண்டர்டெயின்மெண்ட் காமெடி படத்தை நன்றாகவே எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

வார விடுமுறையை கொண்டாட ஏற்றப் படமாக இந்த “கடைசி காதல் கதை” படம் நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…

லாஜிக் பார்க்காமல் சிரித்து ரசிக்கக் கூடிய படமாக வந்திருக்கிறது இந்த “கடைசி காதல் கதை”.

கருத்து கூறவோ பாடம் புகட்டவோ வராமல், நம்பி வரும் ரசிகர்களை 2 மணி நேரம் எண்டர்டெயின்மெண்ட் செய்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைக்கும்படியான கதையை கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ஆர் கே வி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *