Damakka.in

Website for Tamil Cinema

இது கதையல்ல நிஜம் ; விமர்சனம்

கிராமத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றும் ஆர்.வி உதயகுமாருக்கு ஜெகன் மற்றும் இன்னொரு மகள் என இரண்டு குழந்தைகள். இவர்களுடன் அனாதை சிறுவனான சந்தோஷ் சரவணனையும் தனது மூன்றாவது பிள்ளையாக வளர்க்கிறார். எதிர்பாராத விதமாக ஒருநாள் அவர் மரணத்தை தழுவ மூவோரும் ஒருதாய் பிள்ளைகளாக வளர்கின்றனர்.

ஜெகன் வளர்ந்து வாலிபன் ஆனதும் தந்தையின் போலீஸ் வேலை வாரிசு அடிப்படையில் அவருக்கு கிடைக்கிறது. சிறுவயதிலிருந்து போலீஸ் ஸ்டேஷனில் எடுபிடியாக வேலை பார்த்து பழகிய சந்தோஷ் சரவணன் ஸ்டேஷனுக்கு செல்லப்பிள்ளை போல வலம் வருகிறார். அந்த ஊர் அருவியில் இருந்து குதித்து தற்கொலை செய்பவர்களின் உடலை மீட்டு தருவது அவரது வேலை.

இந்த நிலையில் ஜெகனின் தங்கை சந்தோஷ் சரவணனை தனது அண்ணனாக நினைக்காமல் அவர்மீது ஒருதலை காதலில் விழுகிறார். சந்தோஷ் சரவணனோ  அந்த ஊரில் பீடி சுற்றும் தொழில் செய்யும் சோனு லட்சுமியை காதலிக்கிறார். தனது மாமனை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதில் இருந்து தப்பிப்பதற்காக அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார் சோனு லட்சுமி.

இவர்கள் திருமணத்திற்கு முன்னதாக தங்கையின் திருமணத்தை நடத்த முடிவு செய்யும்போது தான் தனது தங்கை சந்தோஷை காதலிப்பது தெரியவர, அதிர்ச்சி ஆகிறார் ஜெகன். அண்ணனாக நினைக்க வேண்டியவனை காதலிக்கும் தங்கையின் மனதை மாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ஜெகன்.

இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அருவியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார் சோனு லட்சுமி, ஜெகனின் தங்கை மனம் மாறினாரா ? சோனு லட்சுமி மரணத்திற்கு யார் காரணம் என்பது போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

பிரபுதேவா நடித்த ராசையா என்கிற திரைப்படத்தை இயக்கிய கண்ணன் ராஜமாணிக்கம் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார். இப்படி எல்லாம் நடக்குமா என்று நாம் கேள்வி எழுப்புவோம் என்று தெரிந்து தானோ என்னவோ படத்திற்கு இது கதையல்ல நிஜம் என்று டைட்டில் வைத்துள்ளார்.

அறிமுக கதாநாயகனாக நடித்துள்ள சந்தோஷ் சரவணன் மீட்டருக்கு மேலே போகாமல் வழக்கமாக சில அறிமுக நடிகர்கள் செய்யும் அலப்பறைகள் எதுவும் செய்யாமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் தனக்கு சமமாக ஜெகனுக்கும் பல காட்சிகளை விட்டுக் கொடுத்து அன்டர்பிளே செய்து நடித்துள்ளார்.

இதுவரை நகைச்சுவை கதாபாத்திரங்களின் பார்த்து வந்த காமெடி நடிகர் ஜெகன் இந்த படத்தில் அப்படியே ஒரு யூ டர்ன் எடுத்து குணசித்திர கதாபாத்திரத்தில் ஒரு புதிய பரிமாணம் காட்டி உள்ளார். இனி அவர் காமெடி நடிப்பை தொடர்வதை குறைத்துக்கொண்டு இது போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தால் அவரது எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும்.

கதாநாயகிகளாக நடித்துள்ள சோனு லட்சுமி மற்றும் ஜெகனின் தங்கையாக நடித்தவர் இருவருமே பொருத்தமான தேர்வு தான் எனது நிரூபித்துள்ளார்கள். மறைந்த நடிகர் டி.பி கஜேந்திரன் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் எல்லாம் இன்ஸ்பெக்டரா என்று கேட்பதை விட அந்த கதாபாத்திரத்தை அப்படியே ரசித்துவிட்டு போக வேண்டும்.

நாயகியின் மாமனாக நடித்துள்ளவர், நாயகியின் அப்பா, கிளைமாக்ஸ் வருவதற்கு கொஞ்ச நேரம் முன்பு என்ட்ரி கொடுத்தாலும் மிரட்டலாக நடித்துள்ள மூணார் ரமேஷ் உள்ளிட்ட சிலர் பாராட்டும்படியாக நடிப்பை வழங்கியுள்ளனர். கோவை சரளா, சென்றாயன் இருவரும் காமெடி என்கிற பெயரில் ஏதோ பண்ண முயற்சித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தாஜ்நூரின் இசையில் இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நாயகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ராசையா படத்தை இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளாரா என படம் முடிந்தபின் நமக்குள் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *