Damakka.in

Website for Tamil Cinema

இன் கார் ; விமர்சனம்

இறுதிச்சுற்று படம் மூலம் ரசிகர்களின் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்த நாயகி ரித்திகா சிங் நடித்துள்ள படம் தான் இந்த இன் கார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப 90 சதவீத படம் காருக்குள்ளேயே நடக்கிறது.
ஊரில் ஒரு பிரச்சனையின் சிக்கி சிறைக்குச் சென்ற தன்னுடைய தம்பியை மீட்டு வேறு ஒரு ஊரில் தங்க வைப்பதற்காக தனது மாமாவுடன் பயணிக்கிறார் அவரது அண்ணன். இவர்களது ஜீப் ரிப்பேர் ஆகிவிட வழியில் வரும் வயதான ஒருவரின் வாகனத்தை நிறுத்தி அவரை மிரட்டி அதில் பயணிக்கின்றனர்.
இந்த மூவரும் போகும் வழியிலேயே தம்பியின் பாலியல் இச்சை தொந்தரவு தாங்காமல் வழியில் எதிர்படும் இளம்பெண் ரித்திகா சிங்கை காரில் கடத்துகின்றனர். தங்களது பகுதிக்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிடுகின்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் அவர்களிடமே சிக்குகிறார் ரித்திகா சிங். வயதான அந்த டிரைவராலும் ரித்திகா சிங்கை காப்பாற்ற முடியாத சூழல். இந்த நிலையில் அவர்களிடமிருந்து ரித்திகா சிங் தப்பினாரா ? இல்லை அவர்களின் தாக்குதலுக்கு இரையானாரா என்பது பரபரக்க வைக்கும் கிளைமாக்ஸ்.
ஒரு நாளைக்கு குறைந்தது இந்தியா முழுவதும் 100 பெண்களாவது கடத்தப்படுகிறார்கள் என சமீபத்திய செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சி அளித்தது. அதன் அடிப்படையில் இந்த படத்தை இயக்குனர் ஹர்ஷவதன் உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக இளம் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்று நாம் இதுவரை செய்திகளாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு பெண் கடத்தப்பட்டால் என்ன விதமான மன உளைச்சலுக்கு ஆளாவாள், என்ன விதமான போராட்டங்களை அவள் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை ஒரு மொத்த படமாக எடுத்து, பெண்களை கடத்த நினைப்பவர்களின் கல் மனதையும் கரைய வைக்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஹர்ஷவர்தன்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெகு கச்சிதமாக தனது கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ரித்திகா சிங். ஒரு காருக்குள்ளேயே இரண்டு ஆண்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு படம் முழுவதும் பயணிக்க வேண்டிய அந்த இக்கட்டான சூழலையும் தப்பிப்பதற்காக ஒரு வழி கிடைக்காதா என ஏங்கும் மனதையும் பல காட்சிகளில் பார்வையாலையே வெளிப்படுத்தி உள்ளார் ரித்திகா சிங். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவர் எடுக்கும் அதிரடி அவதாரம் படம் பார்க்கும் ஆண்களையே சபாஷ் போட வைக்கிறது.
படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களான சந்திப் கோயட், மனிஷ் ஜஞ்சோலியா, ஜியான் பிரகாஷ் உள்ளிட்டோர் மிகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளனர், காரிலேயே பயணிக்கும் காட்சிகள் தான் அதிகம் என்றாலும் அதை சலிப்புத் தட்டாதவாறு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோபாத்தியாய்.
அவருக்கு பக்கபலமாக நின்று படத்தொகுப்பு செய்த மாணிக் திவார் பாராட்டுக்குரிய இன்னொரு நபர். படத்தின் பரபரப்பை கூட்டும் விதமாக பின்னணி இசையால் மெருகேற்றிய மதியாஸ் டூப்லெஸ்சியும் தன் பங்கிற்கு படத்தை தாங்கி பிடிக்கிறார்.
இளம் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக மட்டுமல்ல, ஒரு கடத்தல் நிகழ்வால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கும் மோசமான குணம் கொண்ட ஆண்கள் கூட திறந்துவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் படமாக இந்த படம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *