மாநாடு படத்திற்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் முதன்முறையாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ள படம் தான் இந்த கஸ்டடி. இந்த எதிர்பார்ப்பை இதில் ஈடுகட்டி உள்ளாரா இயக்குனர் வெங்கட் பிரபு ?
ஒரு சாதாரண கான்ஸ்டபிள் நாக சைதன்யா. அவரது காதலி கீர்த்தி ஷெட்டி. ஆம்புலன்ஸ்க்கு வழி விட வேண்டும் என்பதற்காக முதல்வரின் கார் சொல்லும் பாதையை தடைபோட்டு தடுத்து நிறுத்தி அதற்காக முதல்வர் பிரியாமனியிடமே பாராட்டு வாங்குகிறார் நாக சைதன்யா. ஆனால் அதே முதல்வரையே சிறைக்கு அனுப்ப வைக்கப்போகும் மிகப்பெரிய போராட்டத்தில் தன்னையே அறியாமல் அவர் இறக்கி விடப்படுகிறார்.
இதில் முதல்வருக்கு எதிரான சாட்சியாக கருதப்படும் ரவுடி அரவிந்த்சாமியை சிபிஐ அதிகாரிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் இறங்குகிறார் நாக சைதன்யா. இதை முறியடித்து அரவிந்த்சாமியை கொன்று, முதல்வரை வழக்கில் இருந்து காப்பாற்ற அதிரடி முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரி சரத்குமார்.
விருப்பமில்லாத கல்யாணத்தை விட்டு விலகி ஓடிவந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலனுடன் தானும் இணைந்து கொள்கிறார் கீர்த்தி ஷெட்டி. நாக சைதன்யாவால் ஒரு முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரத்தையும் மீறி தான் நினைத்ததை நேர்மையாக சாதிக்க முடிந்ததா, இல்லையா என்பது தான் மீதிக்கதை.
குருவி தலையில் பனங்காய் என்பது போல மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஒரு சாதாரண கான்ஸ்டபிள் சுமக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ள கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் கதை ஓட்டத்தில் போகப்போக இந்த சவாலான விஷயத்தை ஒரு நாயகன் எப்படி முடிக்க போகிறான் என்கிற ஆர்வத்தை படம் முழுக்க நம் மீது ஏற்றி வைத்து விடுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. நாக சைதன்யாவும் கூடுமானவரை அந்த கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்த நியாயத்தை செய்திருக்கிறார்.
வில்லன் என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் தனது வழக்கமான தனித்துவமான நடிப்பால் சீரியஸாக செல்லும் கதையை ஆங்காங்கே நகைச்சுவையாக நகர்த்தி கலகலப்பூட்டுகிறார் அரவிந்த்சாமி. அதேபோல சரத்குமார் இன்னும் தான் பழைய ‘சூரியன்’ தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆக்சன் மற்றும் சேசிங் காட்சிகளில் அதிரடி வித்தை காட்டியுள்ளார். இதுபோன்ற கதாபாத்திரங்கள் அவரது கம்பீரத்தை மேலும் கூட்டுகின்றன.
படம் முழுவதும் கதாநாயகனுடன் கதாநாயகி இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி கதாநாயகனுடன் பயணிக்கும் விதமாக ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வலிந்து திணித்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதே சமயம் ஒப்புக்கு சப்பானியாக இல்லாமல் கதாநாயகனுக்கு உதவியாக நியாயத்திற்காக தானும் சேர்ந்து போராடும் ஒரு கதாபாத்திரமாக கீர்த்தி செட்டியின் கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்காக அவரை தாராளமாக பாராட்டலாம்.
முதலமைச்சர் ஆக வரும் பிரியாமணி அந்த கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. சிபிஐ அதிகாரிகளாக வரும் சம்பத், ஜெயபிரகாஷ் ஆகியோர் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சம்பத் கதாபாத்திரம் இதுநாள் வரை அவர் மீது இருந்து வந்த எதிர்மறை பிம்பத்தை உடைத்து அவள் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
ஏதோ சேர்க்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டது போல உருவாக்கப்பட்டுள்ளது பிரேம்ஜியின் கதாபாத்திரம். வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இவர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் ஜீவா மற்றும் கயல் ஆனந்தியின் கதாபாத்திரங்கள் சுவாரஸ்யம்.
ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஆன நாக சைதன்யா இந்த அளவிற்கு அரசு இயந்திரத்தை எதிர்த்து ஏன் போராடுகிறார் என்பதற்கு பின்னணியில் சொல்லப்பட்டுள்ளது அழுத்தமான காரணம். கிளைமாக்ஸில் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பிக்கும் ஆதாரம் நாம் 90களில் பார்த்த ஒன்று தான் என்றாலும் இந்த படத்தில் அதில் எதிர்பாராத ஒன்று என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அனிக்காட்டு காட்சிகள், ரயில் சண்டை காட்சிகள் பிரமிப்பாக படமாக்கப்பட்டுள்ளன. கதிரின் அசத்தலான ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்கள். பாடல்களைவிட பின்னணி இசையில் தான் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்கள் இசைஞானியும் இளையஞானியும்.
மாநாடு படத்தை பார்த்த அனைவரும் அந்த எதிர்பார்ப்புடன் இந்த படத்திற்கு வராமல் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராக வந்தால் இந்த கஸ்டடி உங்களை நிச்சயம் சந்தோசப்படுத்தும்.