Damakka.in

Website for Tamil Cinema

அயோத்தி ; விமர்சனம்

படத்தின் டைட்டிலை பார்த்துவிட்டு இது ஏதோ மதம் சம்பந்தப்பட்ட படமோ என நினைத்து விட வேண்டாம். மனிதம் பேசும் படம் இது.

அயோத்தியில் பூஜை சம்பந்தமான பொருட்களை விற்கும் வியாபாரி யஷ்பால் சர்மா. மனைவி, மகள், மகன் என அனைவருமே அவரைக் கண்டால் பயந்து நடுங்கும் அளவுக்கு ரொம்பவே கண்டிப்பானவர். இப்படிப்பட்ட நிலையில் ஒரு தீபாவளி தினத்தன்று ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் ரயிலில் வந்து மதுரையில் இறங்குகிறார் யஷ்பால் சர்மா, அங்கிருந்து டாக்ஸி மூலமாக ராமேஸ்வரம் செல்லும்போது அவரது கோணங்கித்தனமான நடவடிக்கைகளால் டிரைவருக்கும் அவருக்கும் ஏற்படும் வாக்குவாதம் மிகப்பெரிய விபத்தில் சென்று முடிகிறது.

அந்த விபத்தில் யஷ்பால் சர்மாவின் மனைவி துரதிஷ்டவசமாக உயிரிழக்கிறார். அடிபட்ட டிரைவர் தனது நண்பனான சசிகுமாருக்கு போன் செய்து விவரம் சொல்ல, அவர் சார்பாக அந்த குடும்பத்திற்கு உதவ வேண்டிய பொறுப்பு சசிகுமாரை வந்தடைகிறது. பாஷை தெரியாத ஊரில் முரட்டுத்தனமான அப்பா, அம்மாவை இழந்து வாடும் மகள், மகன் ஆகியோரை அந்த அம்மாவின் உடலுடன் சேர்த்து அயோத்திக்கு அன்றைய தினமே அனுப்பி வைக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்குகிறார் சசிகுமார்.

ஒரு பக்கம் கலாச்சாரம், சடங்கு, சம்பிரதாயங்கள் என பிடிவாதம் பிடிக்கும் அந்த வட மாநில மனிதர். இன்னொரு பக்கம் அரசு நடைமுறை விதிகளை காரணம் காட்டி மனிதநேயத்தை புறந்தள்ளும் நம்மூர் மனிதர்கள் என இவற்றுக்கு மத்தியில் இருந்து போராடி அவர்களை சசிகுமார் அயோத்திக்கு அனுப்பி வைத்தாரா என்பது தான் மீதிக்கதை.

இதுவரை தமிழக கிராமத்து இளைஞனின் முகமாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்த சசிகுமார் இந்த படத்தில் மாநிலம் தாண்டி மனித நேயம் பேசும் மனிதராக நம்முன் உயர்ந்து நிற்கிறார். எந்த ஹீரோயிசமும் இல்லாமல் ஒரு சராசரி மனிதனாக சக மனிதனின் துயரத்தில் பங்கு எடுத்துக்கொண்டு உதவ வேண்டும் என்ன என்கிற எண்ணத்தை படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் விதைத்து அனுப்புகிறது அவரது கதாபாத்திரம். நீண்ட நாளைக்கு பிறகு சசிகுமாருக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம். மீண்டும் ஒரு வெற்றி படம் என்று தாராளமாக சொல்லலாம்.

சசிகுமாரை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் வட இந்திய நடிகர் யஷ்பால் சர்மா. அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். படம் துவக்கத்தில் இருந்து கடைசி வரை அந்த கதாபாத்திரத்தின் மீது நமக்கு கோபமும் எரிச்சலும் கலந்த உணர்வை தொடர செய்திருப்பதே அவரது நடிப்பின் வெற்றி தான். படிப்படியாக அவர் தன்னை ஒரு மனிதனாக உணரும் தருணத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் வெற்றிக்கு தூணாக இருந்து தாங்கிப் பிடிக்கும் இன்னொரு நபர் கதாநாயகி பிரியா அஸ்ராணி. ஹிந்தி மட்டுமே பேச தெரிந்த அவர், படம் முழுவதும் பெரும்பாலும் கண் அசைவுகளாலும் முகபாவங்களாலும் உடல் மொழியாலும் மட்டுமே தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படி ஒரு நிலை எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் வந்து விடக்கூடாது என்கிற பச்சாதாபத்தை படம் முழுவதும் நம் மீது சுமத்தி விடுகிறார் தனது நடிப்பால்.

அவரது தம்பியாக வரும் சிறுவன் கூட அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளான். குறிப்பாக யஷ்பால் சார்மாவின் மனைவியாக நடித்தவரும் கூட அவரது தாயுள்ளத்தை வெளிப்படுத்தும் நடிப்பால் அவருக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்று ஒரு மகனாக சகோதரனாக நம்மை பதைபதைக்க செய்து விடுகிறார்.

மனிதநேயத்திற்கு உதவியாக இருக்கும் கதாபாத்திரங்களில் விஜய் டிவி புகழ், கல்லூரி வினோத், சவப்பெட்டி விற்பனை செய்யும் போஸ் வெங்கட், உதவ மனம் இருந்தும் அரசு விதிகளின்படி உதவ முடியாமல் தவிக்கும் விமான நிலைய அதிகாரி, மருத்துவர் என பல கதாபாத்திரங்களும் இந்த கதையை உணர்வுகளுடன் அழகாக கடத்த உதவி செய்துள்ளார்கள்.

இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் மந்திரமூர்த்தி மனிதம், மனிதநேயம் ஆகியவற்றை மட்டுமே மனதில் வைத்து கமர்சியல் அம்சங்கள் எதையும் படத்தில் இணைக்காமல் ஒரு அற்புதமான காவியமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார். குறிப்பாக சசிகுமார் கதாபாத்திர பெயர் என்ன என்பதை சொல்லாமல் கிளைமாக்ஸில் அதை வெளிப்படுத்தும்போது தியேட்டரே எழுந்து நின்று கைதட்டுகிறது.

நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய உன்னதமான படம் இது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *