Damakka.in

Website for Tamil Cinema

அரியவன் ; விமர்சனம்

தொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கி, சில மாதங்களுக்கு முன்பு வெளியான திருச்சிற்றம்பலம் படம் மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அரியவன். எதனால் இவன் அரியவன் ? பார்க்கலாம்.
கபடி விளையாட்டு வீரரான ஈஷான், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து படித்து வேலை பார்க்கும் பிரணாலியை காதலிக்கிறார். பிரணாலியின் தோழி ஒருவர் காதல் என்கிற பெயரில் மோசடி கும்பலை சேர்ந்த ஒருவரிடம் ஏமாறுகிறார். அவரை மிரட்டும் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இதை தடுத்து அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஈஷான் இந்த கும்பலின் தலைவனாக பிரபல ரவுடி டேனியல் பாலாஜி இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
மேலும் அவரிடம் இதுபோன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் வலையில் சிக்கி இருப்பதை கண்டுபிடித்து அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார் ஈஷான். இதனால் கோபமான டேனியல் பாலாஜி பாதிக்கப்பட்ட பெண்களையே உயிர் பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார். இந்த மோதலில் இறுதியில் என்ன நடந்தது ? ஈஷான் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தார் என்பது கிளைமாக்ஸ்.
ஒரு அறிமுக நடிகருக்கு குறிப்பாக ஹைட்டும் வெயிட்டுமாக உள்ள ஈஷானுக்கு இது கச்சிதமான கதை தான்.. பொருத்தமான கதாபாத்திரம் தான்.. அதே சமயம் காதல் என்கிற பெயரில் அடிக்கடி வந்து போகும் டூயட் பாடல்கள் அவர் கதாபாத்திரத்தின் மீது ஏற்படும் ஈர்ப்பை குறைக்கின்றன. இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார் ஈஷான். அதே சமயம் நடிப்பு, முக பாவங்கள், உடல் மொழி ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் ஒரு நல்ல இடத்தை தக்க வைப்பார் என சொல்லலாம்.
கதாநாயகியாக பிரணாலி. பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அழகான களையான முகம். அதிலும் சமூக அக்கறையுடன் கூடிய அவரது செயல்பாடுகள் அவரது கதாபாத்திரத்தை மேலும் அழகூட்டுகின்றன.
வில்லனாக நீண்ட நாளைக்கு பிறகு அதே வில்லத்தனம் மாறாத டேனியல் பாலாஜியை பார்க்க முடிகிறது. ரமா, சூப்பர் குட் லட்சுமணன் உள்ளிட்டோரின் குணச்சித்திர நடிப்பும் பாராட்ட வைக்கிறது.
சமீப காலமாக இளம் பெண்கள் காதல் என்கிற பெயரில் மோசடி நபர்களின் வலையில் சிக்கும் செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த படத்தை உருவாக்கியதற்காகவே இயக்குனர் மித்ரன் ஜவஹரை பாராட்டலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *