Damakka.in

Website for Tamil Cinema

அகிலன் ; விமர்சனம்

பூலோகம் என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன், ஜெயம் ரவி இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் படம் அகில.ன் இந்தப்படத்திலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்களா ? பார்க்கலாம்.
துறைமுகம் பகுதியில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவர் ஹரிஷ் பெராடி. கண்டெய்னர்கள் மூலமாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு வலது கையாக இருப்பவர் ஜெயம் ரவி. வலது கையாக இருந்தாலும் ஹரிஷ் பெராடிக்கே உத்தரவு போடும் இன்டர்நேஷனல் தாதாவை பார்க்க வேண்டும் என்பதும் தானும் ஒரு தனி தாதாவாக மாற வேண்டும் என்பதும் ஜெயம் ரவியின் விருப்பம்.
ஒரு கட்டத்தில் நாடே தேடும் ஒரு குற்றவாளியை தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த உள்ளூர் தாதாக்கள் தயங்கி நிற்கிறார்கள் அதை சவாலாக எடுத்துக்கொண்டு சாதித்து காட்டுகிறார் ஜெயம் ரவி. இப்படி பெரும்பாலும் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் பணம் சேர்க்கிறார் ஜெயம் ரவி.
அவர் தன்னைவிட பெரிய ஆளாக வளர்வது கண்டு ஹரிஷ் பெராடி, ஜெயம் ரவி பற்றிய உண்மையை ஆராயத் துவங்குகிறார். அப்போதுதான் ஜெயம் ரவி யார் என்பதும் அவர் எதற்காக இந்த குற்றங்களில் ஈடுபடுகிறார் என்பதும் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் தெரிய வருகிறது. இதன் பின்னால் ஒளிந்துள்ள வணிக அரசியலும் வெளிச்சத்துக்கு வருகிறது.
ஜெயம் ரவி எதற்காக இந்த வேலையை செய்கிறார் ? நான் நினைத்ததை இறுதியில் அவரால் சாதிக்க முடிந்ததா ? உண்மையிலேயே அவர் நல்லவரா ? கெட்டவரா ? என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
அகிலன் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி ஒரு அடியாளாக, ரௌடியாக கட்டுமஸ்தான உடலுடன் இறுகிய முகத்துடன் ஜெயம் ரவி அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார். படத்தின் இடைவேளை வரை அவர் நல்லவரா கெட்டவரா என்பதே தெரியாமல், அவரது ஹீரோயித்தை நம்மை ரசிக்க வைத்து விடுவது அவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி. குறிப்பாக இடைவேளைக்கு முன்னதாக அந்த வெளிநாட்டு நபரை ஜெயம் ரவி தந்திரமாக தப்பிக்க வைக்கும் அந்த கால் மணி நேர காட்சிகள் நம்மை இருக்கை நோக்கி அழைத்து வந்து விடுகின்றன. படத்தில் போனஸாக இன்னொரு ஜெயம் ரவியும் இருக்கிறார். இருவரையும் எப்படி தொடர்புப்படுத்துகிறார்கள் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதாநாயகியாக போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர். நாயகனின் கைப்பாவையாக அவருக்கு உதவியாக வேலைகளை செய்து கொடுக்கும் கதாபாத்திரம். தேவையானபோது வந்து போகிறார் என்றாலும் அவரது கதாபாத்திரத்தில் போலீசுக்கே உரிய அந்த கம்பீரம் மிஸ்ஸிங்.
வில்லன்களை பற்றி சொல்வதற்கு முன்பாக இந்த படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிராக் ஜானி, ஒரு நேர்மையான துடிப்பான போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவிக்கு டஃப் கொடுத்துள்ளார்.
லோக்கல் வில்லனாக ஹரிஷ் பெராடி. ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழகிய கதாபாத்திரம் என்பதால் அசால்ட்டாக செய்திருக்கிறார். இன்டர்நேஷனல் தாதாவாக வரும் தருண் அரோரா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.
சில நிமிடங்களே வந்தாலும் தான்யா ரவிச்சந்திரனின் கதாபாத்திரம் நம் மனதில் நங்கூரம் இட்டு அமர்ந்து கொள்கிறது. இவர்கள் தவிர மதுசூதனன் ராவ், ஹரிஷ் உத்தமன் ராஜேஷ், தமிழ், மைம் கோபி என மற்ற கதாபாத்திரங்களும் இந்த கதைக்கு தேவையான பங்களிப்பை செய்துள்ளார்கள்.
முழுக்க முழுக்க துறைமுகத்திலேயே இந்த படம் படமாக்கப்பட்டு இருந்தாலும் அதை எந்தவித சலிப்பும் தட்டாமல் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம். அதேபோல சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் காட்சிகளுக்கான விறுவிறுப்பை கூட்ட துணை நிற்கிறது.
இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து காட்சிகளை வரிசைப்படுத்தி இருக்கிறார். இடைவேளை வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றவர் இடைவேளைக்குப் பிறகு குறிப்பாக கிளைமாக்ஸுக்கு முன்பு கொஞ்சம் இழுத்துப் பிடிக்க தவறி இருக்கிறார் என்று சொல்ல வேண்டும். அவற்றை கொஞ்சம் லாஜிக் உடன் சரி செய்து இருந்தால் இன்னும் படம் கிரிப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் இந்த அகிலன் ரசிகர்களுக்கு பிடித்தமானவன் தான்.. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *