கிராமத்தில் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும் – இந்துமதிக்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம் (கண்ணாயிரம்). இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்தே சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். முதல் மனைவி மற்றும் அவரது மகன்களும் சந்தானத்தையும் அவரது தாயையும் அவமானப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள்.
நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக இருக்கும் சந்தானம், தன் பத்திரிகையாளர் நண்பனின் உதவியால் சில குற்றங்களை கண்டுபிடிக்கிறார். சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் இவர் பெரிய டிடெக்டிவாக மாற வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.
இதனிடையில் தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு கிளம்புகிறார். ஊருக்கு செல்வதற்குள் அவருடைய தாயின் இறுதி சடங்கை சந்தானம் இல்லாமல் செய்து முடித்து விடுகின்றனர். அதன்பின்னர் தந்தை ஜாமின்தாரின் சொத்தில் இரண்டாம் மனைவிக்கும் பங்கு இருப்பதால், இவரும் அதற்காக அந்த கிராமத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அச்சமயம் அந்த கிராமத்தில் திடீர் திடீர் என்று பல மரணங்கள் நடக்கிறது. இங்கு தங்கியிருக்கும் நாட்களில் இதனை கண்டுபிடிக்க சந்தானம் ஆரம்பிக்கிறார். இந்த கேஸை கையில் எடுத்து துப்பறியும் சந்தனத்தை திசைதிருப்பி விட எதிரிகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதனால் எதிரியின் வலையில் சிக்கும் சந்தானம், அதிலிருந்து மீண்டு வந்தாரா? இந்த மரணங்களுக்கான காரணம் யார்? மர்ம மரணங்களை சந்தானம் எப்படி கண்டு பிடிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஏஜென்ட் கண்ணாயிரமாக நடித்துள்ள சந்தானம் நடிப்பில் சிறந்து விளங்கினாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். கதாநாயகியாக வரும் ரியாவின் நடிப்பு ஓகே.
சந்தானத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி மற்றும் அப்பாவாக நடித்துள்ள குரு சமோசுந்தரம் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பின்னணி இசையும், தேனி ஈஸ்வர், சரவணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.. என்றாலும் வழக்கம்போல சந்தானத்தின் காமெடி கலந்த நடிப்பை படம் முழுதும் பார்க்கலாம் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளார் ஏஜென்ட் கண்ணாயிரம்..