Damakka.in

Website for Tamil Cinema

உதயநிதியை பாராட்டிய வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷ்!

 

வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் ஃபுட்பால் பிளஸ் U-13, U-15 மற்றும் U-17 யூத் லீக்களுக்கான புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி, பாலக்காட்டை சேர்ந்த ஜிதினுக்கு ஸ்பெயினில் ஓராண்டு பயிற்சிக்காக தனது பங்களிப்பாக ரூ 22 லட்சத்திற்கான காசோலையும் ஐசரி கணேஷ் வழங்கினார்.

இது குறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, “இன்று தமிழகத்தில் விளையாட்டுத் துறை உதயநிதி அவர்களின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. முதல்வர் திரு. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி இன்னும் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி ஆரம்பிக்க இருக்கிறோம், இதற்காக நல்ல திறமையாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். அந்த வகையில், கேரளாவை ஜிதின் என்பவருக்கான செலவுகளை மொத்தமாக நாங்கள் ஏற்றுள்ளோம். வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி 2023 – 24 சீசனுக்கான முதல் லீக்கிற்குள் நுழைவதாக அறிவித்துள்ளது. வரவிருக்கும் சீசனுக்கு அணி தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே நடந்து வருகின்றன. வேல்ஸ் ஃபுட்பால் அகாடெமி லீக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதையும், இளம் கால்பந்து திறமைகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பைத் தொடர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

புதிய ஜெர்சிகளின் அறிமுகம் மற்றும் ஸ்பெயினில் ஜிதினின் பயிற்சிக்காக டாக்டர் ஐசரி கே. கணேஷின் ஸ்பான்சர்ஷிப் ஆகியவை கால்பந்தை ஊக்குவிப்பதிலும் இளம் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும் அவர்களின் அர்ப்பணிப்பை மேலும் ஊக்குவிக்கிறது.

ஃபுட்பால் பிளஸ் பற்றி: திரு. டேவிட் ஆனந்த் தலைமையிலான ஃபுட்பால் பிளஸ், தமிழ்நாட்டின் சென்னையை மையமாகக் கொண்ட ஒரு தொழில்முறை கால்பந்து அகாடமி ஆகும். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நிறுவனம், பயிற்சி மற்றும் இளைஞர்களின் கால்பந்து மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *