Damakka.in

Website for Tamil Cinema

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்

 

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர்.எம்.வி.ஜிஜேஷ் இயக்கியுள்ள ‘ஓடவிட்டு சுடலாமா ‘என்கிற படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடல் வீடியோவைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், கே. பாக்யராஜ், பேரரசு,சிபி மலையில், லால்,திரைக்கலைஞர்கள் ,அஜ்மல், பிருத்திவிராஜ்,உன்னி முகுந்தன், ரேச்சல் ஜேக்கப் நோலா, ஆன்டோ ஜோசப், சாய்ஜு குருப் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்கள்.

ஒரு திரைப்படத்தின் பாடல் வீடியோவை இத்தனைப் பேர் வெளியிட்டது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று கூறலாம்.

இந்தப் பாடல் வெளியான தினத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் ‘படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பும் வெளியானது. ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு போலவே இந்த ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடலும் யூடியூபிலும் ட்விட்டரிலும் ட்ரெண்டிங்கில் வந்தது. சமூக ஊடகங்களில் ஏராளமான பேர் இதையும் பகிர்ந்தார்கள்.

நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக’ ஓட விட்டு சுடலாமா ‘ உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் தலைப்பே புதுமையாக இருக்கிறது என்று பலராலும் பாராட்டப்பட்டது.புதுமுகங்களின் பங்கேற்பில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்திற்கு பிரகாஷ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேஜிக் பிரேம்ஸ் மியூசிக் சார்பில் அஸ்வின் , சஞ்சீவ், ரிஜோஸ் விஏ, அனூஜ் பாபு இசையமைத்துள்ளனர். ரெத்தீஷ் மோகன் படத்தொகுப்பு செய்துள்ளார். சேது சூர்யா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். நான்கு பாடல்களையும் வினித் மோகன் எழுதியுள்ளார். கிஷோர் மற்றும் ஷாஜி கலை இயக்கத்தைக் கவனித்துள்ளனர் .ரெஜி நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தினை எவரி ஒன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வினித் மோகன் ,பிரகாஷ் வேலாயுதன், சதீஷ் வரிகாட்டு ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் கதாநாயகனாக யுகன் ராஜும் நாயகியாக பத்மா கோபிகாவும் நடித்துள்ளனர்.ஜன கன மன படத்தை இயக்கிய டிஜே மிரட்டும் வில்லனாக வருகிறார்.
தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதைநாயகன் என்று கூறினால் ஒரு கான்டெஸா காரைத்தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு கார் ஒரு குணச்சித்திரமாகவும் படம் முழுக்கப் பயணம் செய்யும் ஒரு பாத்திரமாகவும் வருகிறது. அதற்குத் துணை போகும் பாத்திரங்களாகவே கதை மாந்தர்கள் வருகிறார்கள்.

படத்தின் முதல் பாதி படம் ஒரு அமானுஷ்யம் கொண்டதாகவும் இரண்டாவது பாதி நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும் இருக்கும்.

முதல் பாடலான ‘டீக்கடை வீட்டிலே பொண்ணு ‘ என்கிற பாடலின் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.

படத்தின் கதை பற்றி இயக்குநர் ஜி கே எஸ் கூறும் போது,
”கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலைச் சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன், தன்னிடம் வந்து சேரும் அமானுஷ்யம் கொண்ட ஒரு காரை வைத்துக்கொண்டு அந்தப் பெரிய தாதா கும்பலைப் பழிவாங்கப் புறப்படுகிறான். பலமிக்க வன்முறை கும்பலை எப்படி எதிர்கொண்டான் பழி வாங்கினான் என்பது தான் கதை.பரபரப்பாகவும் சிரிக்க சிரிக்கவும் கதையைக் கூறியுள்ளோம்”என்கிறார்

ஒரு பழிவாங்கும் கதையை முற்றிலும் புதிய கோணத்தில் எடுத்துள்ளார்கள்.இப்படத்தில் படப்பிடிப்பு கம்பம் ,குமுளி, தேனி மற்றும் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, ஜூலையில் வெளியிடும் திட்டத்தில் இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *