Damakka.in

Website for Tamil Cinema

நிமிர்ந்து நில் குறும்பட விழாவில் கௌரவிக்கப்பட்ட சில்லறை விற்பனை கடை ஊழியர்கள்

 

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் சார்பில் சில்லறை வர்த்தக சிறப்பு மையத்தினர்(Centre of Excellence – Retail) 22.12.2022 அன்று காலை 9.00 மணியளவில் ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் சில்லறை விற்பனை ஊழியர்கள் கொண்டாட்டம் 2022 என்ற நிகழ்ச்சியைக் கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.பத்மாவதி அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, நடிகர் மற்றும் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு புகழ் திரு.திருச்சி சரவணக்குமார் அவர்களும் எல்.கே.எஸ் ஜூவல்லரியின் நிர்வாகப்பங்குதாரர் திரு.சர்ஃபராஸ் சையத் அகமது அவர்களும் விருந்தினர்களாகத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
அந்நிகழ்ச்சியில், ஷசுன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராணி மனோகரன் அவர்கள் திரைக்கதையில், மாணவிகள் நடித்து, காட்சி ஊடகவியல் துறையினரால் எடுக்கப்பட்ட குறும்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அப்படம் நிமிர்ந்து நில் என்ற தலைப்பில், சில்லறை விற்பனை ஊழியர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அக்குறும்படத்தை சிறப்புவிருந்தினர்கள் வெளியிட்டனர்.
மேலும் அவர்கள் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாற்றி, போத்தீஸ், சென்னைசில்க்ஸ், ஜெயச்சந்திரன், எல்கேஎஸ்ஜூவல்லரி, வசந்த்&கோ, பச்சையப்பாஸ்சில்க்ஸ், இன்ஸ்டோர், வேலவன் ஸ்டோர் உள்ளிட்ட 15 சில்லறை விற்பனைக் கடைகளைச் சேர்ந்த பணியாளர்களில் 65 ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அயராத சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்தனர். சில்லறை வர்த்தகத்தின் நட்சத்திர ஊழியர்களை அங்கீகரிப்பதில் ஷசுன் கல்லூரியின் சில்லறை வர்த்தக சிறப்பு மையம் எடுத்த முயற்சியைச் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர். தொடர்ந்து ஷசுன் சக்தி மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *