Damakka.in

Website for Tamil Cinema

நான் கடவுள் இல்லை ; விமர்சனம்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் நான் கடவுள் இல்லை. எண்பதுகளில், தான் படங்களை இயக்கிய பாணியில் இந்த படத்தை கொடுக்க முயற்சித்துள்ள எஸ் ஏ சந்திரசேகரனின் முயற்சி வெற்றி பெற்று உள்ளதா ? பார்க்கலாம்.
சமுத்திரக்கனி அதிரடியான போலீஸ் ஆபீஸர். வீச்சருவா வீரப்பன் என்கிற சித்தப்பு சரவணன் அவரால் பிடிக்கப்பட்டு சிறை செல்கிறார். திடீரென ஒருநாள் சிறையில் இருந்து சரவணன் தப்பிவிட்டார் என செய்தி வருகிறது. அதை தொடர்ந்து, தான் ஜெயிலுக்கு செல்ல காரணமாக இருந்த ஒவ்வொரு குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்து வருகிறார் சரவணன். அவரை கண்டுபிடிக்க முடியாமல் சமுத்திரக்கனி திணறுகிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியின் மகளையே கடத்தி மிகப்பெரிய அளவில் துன்புறுத்தி மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் சரவணன்.
இன்னொரு பக்கம் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தை ஒன்று கடவுள் தனது தேவையை நிறைவேற்றுவார் என நினைத்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் பாக்ஸில் போடுகிறது. அதை பார்த்து எஸ் ஏ சந்திரசேகரன் அந்த நம்பிக்கையை, உண்மையாக்கும் விதமாக குழந்தை கேட்டதை கடவுள் கொடுத்தது போல குழந்தையிடம் சேர்ப்பிக்கிறார். இதைத்தொடர்ந்து ஒரு மண்பானை தொழிலாளியின் மருத்துவ படிப்புக்கும் ஒரு கூலி வேலைக்கு செல்லும் பெண்ணின் மகளின் திருமணத்துக்கும் கடவுள் அனுப்பி வைத்தது போல உதவி செய்கிறார்.
இவர்கள் மூலமாக கடவுளே நேரில் வந்து இப்படி உதவிகளை செய்கிறார் என சோசியல் மீடியா மூலமாக செய்தி பரவுகிறது. பாதிக்கப்பட்ட சமுத்திரக்கனியின் மகள் அப்படி என்றால் கடவுளிடம் கடிதம் எழுதிப் போட்டால் இந்த வீச்சருவா வீரப்பனையும் அவர் அழித்து விடுவார் என்ற நம்பிக்கையில் தனது கோரிக்கையை கடவுளுக்கு கடிதம் எழுதி அனுப்புகிறாள்.
இந்த கடிதமும் எஸ்.ஏ சந்திரசேகரன் கைக்கு செல்கிறது. இந்த விஷயத்தில் ஒரு கடவுளாக மாறி எஸ் ஏ சந்திரசேகரனால் கொடூர வில்லன் சரவணனுக்கு தண்டனை கொடுக்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.
கடவுளிடம் முழு நம்பிக்கை வைத்து எதையும் கேட்டால் நிச்சயமாக கிடைக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன். அதற்கு தோதாக பொருத்தமான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனியையும் வில்லனாக சித்தப்பு சரவணனையும் அவர் தேர்ந்தெடுத்தது சரியான தேர்வு. ஆனால் இருவரையுமே கொஞ்சம் ஓவர் டோஸ் கொடுத்து நடிக்க வைத்து விட்டார் என்பதுதான் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கிறது.
சமுத்திரக்கனியை பொருத்தவரை சர்க்கரை பொங்கல் மாதிரி.. அதை பிரசாதமாக கொடுத்தால் அவ்வளவு ருசியாக இருக்கும்.. அதுவே ஒரு நேர உணவாக கொடுத்தால் தின்பதற்கு திகட்டி விடும். அப்படித்தான் இந்த படத்திலும் அவரது கதாபாத்திரம் அமைந்துவிட்டது. அவருக்கு குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள், எதார்த்தம் குறைந்து செயற்கைத்தனமாகவே இருக்கின்றன.
அதேசமயம் அவரது உணர்வையும் துடிப்பையும் பல காட்சிகளில் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார் சமுத்திரக்கனி.
அவரது மனைவியாக இனியா. படம் முழுவதும் ரௌடிக்காக பயந்து பயந்து தனது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கணவனை உலுக்கி எடுக்கும் கதாபாத்திரம். அவரால் முடிந்ததை செய்திருக்கிறார்.
வில்லனாக சரவணன்.. நீண்ட நாளைக்கு பிறகு ஒரு கொடூர வில்லனை திரையில் காட்டியதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் ஜொலிப்பதை போல இதில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
படத்தின் இன்னொரு கதாநாயகியாக அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சாக்சி அகர்வால். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று முன்பு அரசியலில் ஒரு மூத்த தலைவர் கூறியுள்ளார். அதேபோலத்தான் இந்த படத்தில் சாக்சி அகர்வாலின் கதாபாத்திரமும். அவர் இல்லாமல் படத்தை பார்த்தாலும் கதைக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர்ந்து அவரையும் அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகளையும் பார்ப்பது படத்திற்கு மட்டுமல்ல, படம் பார்க்கும் நமக்கும் கொஞ்சம் பாதிப்பு தான்.. அவரது காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம் .
சமுத்திரக்கனியின் மகளாக நடித்துள்ளவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் தனகளது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஒரு நல்ல கருத்தை மையப்படுத்தி படம் எடுக்க விரும்பிய எஸ் ஏ சந்திரசேகரன் அதை கொஞ்சம் சுற்றி வளைத்து கூறி இருப்பது தான் சற்று அலுப்பை தருகிறது. இருந்தாலும் அதிரடி ஆக்சன் படம் பார்ப்பவர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *