Damakka.in

Website for Tamil Cinema

‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

 

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொண்டுள்ளார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக‌ பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

படத்தின் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் பேசியதாவது…
சாதி சார்ந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இப்படத்தில் காட்டுகிறோம். நான் சந்தித்த அனுபவங்களை படமாக எடுத்திருக்கிறேன். பிறக்கும் போது அனைத்து குழந்தைகளும் சமமே. வளர்ந்த பிறகு தான் சாதி என்ற ஏற்றத்தாழ்வு வருகிறது. சாதியம், குலத்தொழில் குறித்து இப்படத்தில் கூறியுள்ளோம்.

பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…
அனைவரது வாழ்க்கையிலும் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை இசை கூடவே வரும். இப்படத்தில் ஒப்பாரி பாடல் ஒன்றை நான் எழுதியுள்ளேன். சாம் சி.எஸ். உணர்ச்சிப்பூர்வமாக இசையமைத்துள்ளார். இசக்கி கார்வண்ண‌ன் திறம்பட இயக்கியுள்ளார். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகை தீபிக்ஷா பேசியதாவது…
இப்படம் சாதி சமந்தப்பட்ட கதை, இந்தக் கதை சமத்துவத்தையும் பேசும், மதத்தையும் பேசும். சேரன் சார் மற்றும் சாம் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். இவர்களுடன் பணியாற்றிய‌து சந்தோஷம்.

நடிகர் துருவா பேசியதாவது…
மூத்த கலைஞர்களுடன் நடிப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அன்புக்கும் ஆதரவுக்கும் அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் ராமசுவாமி பேசியதாவது…
இயக்குநர் இசக்கி கார்வண்ணன் முதல் முறையாக‌ கதை சொல்லும்பொழுது நான் வேறு விதமாக புரிந்து கொண்டேன். ஆனால், இந்த இயக்குந‌ர் சிறந்த எழுத்தாளர் என்பதை இவரின் படைப்பை பார்க்கும்போது அறிந்துகொண்டேன். எனக்கு இப்படத்தில் வசனங்களும் குறைவு. இப்படத்தில் நிறைய காட்சிகளில் பிண‌மாகத்தான் நடித்துள்ளேன்.

நடிகரும் இயக்குநருமான ரவிமரியா பேசியதாவது…
அனைத்து படங்களையும் கலைப் படமாகவும் சமூகப் படமாகவும் உருவாக்கமுடியும். ‘தமிழ்க்குடிமகன்’ நல்ல படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இது தமிழ் மண்ணின் பெருமை பற்றி பேசும் படம்.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது…
இசக்கி கார்வண்ண‌ன் இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளதுடன், பார்வையாளர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்துவார் என்று வாழ்த்துகளை சொல்லி விடைபெறுகிறேன்.

நடிகர் பொன்வண்ணன் பேசியதாவது…
எனக்கு இசக்கி கார்வண்ண‌னை பல வருடங்களாக தெரியும். சினிமாவைப் பற்றி பேசுவோம். ஒரு நாள் தொலைபேசி மூலம் என்னை தொடர்புகொண்டு ‘ஒரு கதை இருக்கு வாங்க சொல்லணும்’ என்று கூறி இக்கதையை கூறினார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க சேரன், லால் என சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்தார். இயக்குந‌ருக்கு மிக முக்கியமானது கதைக்கான நடிகர்களை தேர்ந்தெடுப்பது தான். அதற்கடுத்து இசையமைப்பாளர் முக்கியம். இந்த படத்தில் பாடல்கள் மிகக் குறைவு, ஆனால் பின்னணி இசை மிக முக்கியம் என்று சொல்லலாம். கதையில முதல் ஃபிரேமில் இருந்து கடைசி ஃபிரேம் வரை நம்மை எங்கேஜிங்காக‌ வைப்ப‌து மிகவும் அவசியம். அது இந்த படத்தில் முழுமையாக வொர்க் ஆகியுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஒரு பார்வையாளனாக, ஒரு ரசிகனாக இந்த திரைப்படத்தை நான் ரசித்து பார்த்தேன்.

நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பேசியதாவது…
படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் ‘தமிழ்க் குடிமகன்’ என்ற தலைப்பே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தமிழக அரசியல் சூழலில் சாதி பற்றி இப்படம் பேசுகிறது. வெற்றிகரமான படமாக இது அமையும் என வாழ்த்துகிறேன்.

நடிகர் சரத்குமார் பேசியதாவது…
என் அன்பு சகோதரர் சேரன் நடித்த ‘தமிழ்க்குடிமகன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மை நிலையை எடுத்து கூறும் படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கும். குலத்தொழில் பற்றி இதில் பேசி இருக்கிறார்கள். அந்த முறையை உடைக்கின்ற படமாக ‘தமிழ்க்குடிமகன்’ இருக்கப்போகிறது. இப்படம் வெற்றி திரைப்படமாக அமையும் என வாழ்த்துகிறேன்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது…
நிறைய திரைப்படங்களுக்கு நான் இசையமைத்திருக்கிறேன். ஆனால் இந்த படத்திற்கு இசையமைத்தது குறித்து மிகவும் பெருமை அடைகிறேன். நல்ல கதை என்பது வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும், கண்டிப்பாக இத்திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். இயக்குந‌ர் இசக்கி கார்வண்ண‌ன் அவர்களுக்கு நன்றி.

இயக்குந‌ர் மாரிசெல்வராஜ் பேசியதாவது…
‘தமிழ்க்குடிமகன்’ ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும், இதில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய‌ வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்படும்.

இயக்குந‌ர் அமீர் பேசியதாவது…
இப்படம் உங்களுடைய சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்றால் அது கண்டிப்பாக சாதியை ஒழிக்க பங்காற்றும். என்றும் மனிதனாக வாழ்கிறேன் என்று கூறி விடைபெறுகிறேன்.

இயக்குந‌ர் மற்றும் இத்திரைப்படத்தின் நாயகன் சேரன் பேசியதாவது…
அனைவரும் திரையரங்குகளில் வந்து திரைப்படத்தை பார்க்க வேண்டும். புத்திசாலித்தனமான திரைப்படம் இது. சாதிகளை ஒழிக்க வேண்டும் போன்ற‌ நிறைய நல்ல விஷயங்களை இத்திரைப்படத்தில் சொல்லி இருக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *