Damakka.in

Website for Tamil Cinema

மறு படத்தொகுப்புடன் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்ட பாபா ; விரைவில் வெளியீடு  

2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.

அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங்  செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ‘மாயா மாயா ‘, ‘சக்தி கொடு’, ‘கிச்சு கிச்சு’ என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.

விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *